
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 3ஆவது போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்ற இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தொடரின் 3ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா கேப்டன் மோனாங்க் படேல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி அதிக நம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்கியது.
அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடி மற்றும் சிக்சர் மன்னன் என்று அழைக்கப்படும் அபிஷேக் சர்மா தனது முதல் டி20 உலகக் கோப்பையில் களமிறங்கிய நிலையில் முதல் போட்டியில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா நிதானமாக ரன் குவித்தார். ஆனால், ஆரம்பம் முதலே அதிரடிக்கு திணறிய இஷான் கிஷன் 20 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து திலக் வர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஷிவம் துபேவும் டக் அவுட்டில் வெளியேறினார். அப்போது இந்திய அணி 5.6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்த நிலையில் 100 ரன்களை எட்டுவதே சவாலாக இருந்தது. அப்போது தான் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சீரான இடைவெளியில் பவுண்டரி அடித்து இந்திய அணியின் ரன் ரேட்டை 6 ரன்களிலேயே கொண்டு வந்தார். ரிங்கு சிங் 6, ஹர்திக் பாண்டியா 5 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் அக்ஷர் படேல் களமிறங்கினார். அவர் சிறிது நேரம் நின்று விளையாடினார். எனினும், அவரும் ஒரு கட்டத்தில் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த சூர்ய குமார் யாதவ் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது 6ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 100 ரன்களை எட்டுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 2 ஓவர்களில் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்ட இந்திய அணியின் ஸ்கோர் 19ஆவது ஓவரில் 140 ரன்களை எட்டியது. கடைசியாக 20ஆவது ஓவரை நெத்ராவால்கர் வீசினார். அந்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் 4, 6, 6, 4 என்று 20 ரன்கள் எடுக்க இறுதியாக இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்தது.
இதில் சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரிகள் உள்பட 84 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக விளையாடினார். மேலும், இந்தப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஒரு கேப்டனாக அறிமுக டி20 உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்கள் குவித்த கேப்டன்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 89 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார்.
கேப்டனாக அறிமுக டி20 உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள்:
கிறிஸ் கெயில் 88 ரன்கள் vs Aus The Oval 2009
84* சூர்யகுமார் யாதவ் vs USA Wankhede 2026
68* பாபர் அசாம் vs Ind Dubai 2021
65 மகேலா ஜெயவர்தனே vs Ken Joburg 2007
61 முகமது அஷ்ரஃபுல் vs WO Joburg 2007
பவுலிங்கைப் பொறுத்த வரையில் அமெரிக்க வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதில் அலி கான் 2 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். ஷாட்லி வான் ஷால்க்வாக் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ஹர்மீத் சிங் 2 விக்கெட் எடுக்க, முகமது மோசின் ஒரு விக்கெட் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் அமெரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் சவுரப் நேத்ராவால்கர் 4 ஓவர்கள் வீசி 65 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
இந்திய அணி வீரர்கள்:
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
அமெரிக்க அணி வீரர்கள்:
ஆண்ட்ரிஸ் கோஷ் (விக்கெட் கீப்பர்), சைதேஜா முக்காமல்லா, மோனாங்க் படேல் (கேப்டன்), மிலிண்ட் குமார்,சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஷுபம் ரஞ்சனே, ஹர்மீத் சிங், முகமது மோசின், ஷாட்லீ வான் ஷாக்வாக், அலி கான், சௌரப் நட்ராவால்கர்.