KKR vs RR, IPL 31st Match
கேகேஆர் மற்றும் ஆர்ஆர் அணிகளுக்கு இடையிலான 31ஆவது லீக் போட்டி தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆர்ஆர் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Kolkata Knight Riders vs Rajasthan Royals
இதில் சால்ட் 2ஆவது பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரியான் பராக் நழுவவிட்டார். எனினும் அவர் பெரிதாக அடிக்கவில்லை. 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி அதிரடியாக விளையாடி 30 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 11 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஆண்ட்ரே ரஸல் களமிறங்கினார்.
Sunil Narine Hundred
இந்த நிலையில் தான் நிதானமாக தொடங்கிய சுனில் நரைன் அதன் பிறகு அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சரவெடியாக வெடித்து 49 பந்துகளில் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தற்போது அதனை 109 ரன்களாக மாற்றியுள்ளார்.
Sunil Narine First IPL Century
நரைன் 56 பந்துகள் விளையாடி 13 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 109 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார். சதம் அடித்த சுனில் நரைனுக்கு ஷாருக்கான் பாராட்டு தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து பிரேக்கின் போது மைதானத்திற்குள் வந்த கேகேஆர் ஆலோசகர் கௌதம் காம்பீர், சுனில் நரைனை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Kolkata Knight Riders vs Rajasthan Royals, IPL 31st Match
மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சதம் விளாசிய 3ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு இதே நாளில் (ஏப்ரல் 16) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளில் 6 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உள்பட 104 ரன்கள் எடுத்தார். அதற்கும் முன்னதாக பிராண்டன் மெக்கல்லம் கேகேஆர் அணிக்காக சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
KKR vs RR, Sunil Narine
இந்த சீசனில் இதுவரையில் கேகேஆர் அணியில் 5 போட்டிகளில் விளையாடிய சுனில் நரைன் 2, 47, 85, 27, 6 என்று மொத்தமாக 167 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த நிலையில் தான் இன்றைய போட்டியில் 109 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 16 ஆம் தேதி நடந்த 20ஆவது லீக் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.