டி20 உலக கோப்பை: இந்திய அணியின் நலன் கருதி அதிரடி முடிவு..! குஷியில் கோலி.. பீதியில் ராகுல்

First Published Sep 10, 2022, 5:02 PM IST

டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் தொடக்க வீரர்களாக இறங்கலாம் என்று கவாஸ்கர், ஹர்பஜன் சிங் ஆகியோர் கருத்து கூறியுள்ளனர்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. 
 

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அனைவரின் கவனமும் அணி தேர்வின் மீதே உள்ளது.  ஆசிய கோப்பை வரை இந்திய அணி ஆடும் லெவனை உறுதி செய்யாமல் பரிசோதனைகளை செய்ததும், அதன்விளைவாக ஆசிய கோப்பையில் தோற்றதும் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பரிசோதனை செய்யும் காலக்கட்டம் முடிந்துவிட்டது. 
 

வலுவான அணி காம்பினேஷனுடன் ஆடாததுதான் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம். எனவே டி20 உலக கோப்பையில் அதே தவறை செய்துவிடாமல், வலுவான ஆடும் லெவனை உறுதி செய்துவிட்டு களம் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 

இந்திய அணியின் தொடக்க ஜோடி, விக்கெட் கீப்பர், ஸ்பின் - ஃபாஸ்ட் பவுலிங் காம்பினேஷன் ஆகியவற்றில் உறுதியான முடிவை எடுக்க வேண்டியுள்ளது. 

ஆசிய கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் விராட் கோலி ஓபனிங்கில் இறங்கி சதமடித்தது, அவரையே தொடக்க வீரராக இறக்குவது குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளாக சதமடிக்காமல் இருந்துவந்த விராட் கோலி, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஓபனிங்கில் இறங்கி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசினார். அவர் ஓபனிங்கில் இறங்கி ஐபிஎல்லிலும் சதமடித்துள்ளார்.

எனவே கோலியையே ஓபனிங்கில் இறக்கலாமா என்ற விவாதம் எழுந்துள்ளது. விராட் கோலியும் டி20 கிரிக்கெட்டில் ஓபனிங்கில் ஆட ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கேஎல் ராகுலிடம் கேட்டபோது, அப்படியென்றால் நான் வெளியே உட்காரவேண்டுமா என்று அதிருப்தியுடனும் காட்டத்துடனும் கேள்வியெழுப்பினார்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து கூறிய ஹர்பஜன் சிங், ஐபிஎல்லிலும் ஆர்சிபி அணிக்காக ஓபனிங்கில் ஆடியிருக்கிறார் கோலி. சொல்லப்போனால் ஓபனிங்கில் நன்றாகவே ஆடியிருக்கிறார். ஓபனிங்கில் ஆடி ஒரு சீசனில் 921 ரன்களை குவித்துள்ளார். எனவே ஓபனிங் கோலிக்கு புதிதல்ல. அவருக்கு பிடித்தமான பேட்டிங் ஆர்டர். எனவே ரோஹித் - கோலி தொடக்க வீரர்களாக இறங்கிக்கொண்டு, ராகுலை 3ம் வரிசையில் இறக்கலாம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய சுனில் கவாஸ்கர், விராட் கோலியை தொடக்க வீரராக இறக்குவது நல்ல திட்டம்தான். ஆனால் ராகுல் ஒப்புக்கொள்வாரா என்று தெரியவில்லை. ஓபனிங்கில் கோலி ஆடிய விதம்,  பயிற்சியாளர், கேப்டன், தேர்வுக்குழுவிற்கு கூடுதல் ஆப்சனை வழங்கியுள்ளது என்றார் கவாஸ்கர்.
 

click me!