
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதன் பலனாக தென் ஆப்பிரிக்கா 32 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுவரையில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரில் கூட வென்றதில்லை என்று கூறப்பட்ட நிலையில் இந்த முறையும் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சரி, டெஸ்ட் தொடரை சமன் செய்வதற்கு கடைசி வாய்ப்பாக இன்று நடக்கும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.
கேப் டவுனில் நடக்கும் 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். டெம்பா பவுமா காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக டீன் எல்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்கா அணியில் டெம்பாவிற்கு பதிலாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ஜெரால்டு கோட்ஸிற்கு பதிலாக லுங்கி நிகிடி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், கேசவ் மகாராஜ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இதே போன்று இந்திய அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மலைகளுக்கு நடுவில் காட்சி தரும் இந்த மைதானத்தில் இதுவரையில் 59 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளது. இதில், தென் ஆப்பிரிக்கா 27 வெற்றிகளையும், 21 தோல்விகளையும் அடைந்ததோடு, 7 போட்டிகளை டிராவும் செய்துள்ளது.
ஆனால், இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், 2 போட்டிகளை டிராவும் செய்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியானது மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டியும் மழையால் பாதிகப்பட கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 5 நாட்களும் மழைக்கான வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆகையால், இந்த 5 நாட்களும் போட்டியானது மழையால் பாதிப்பில்லாமல் நடக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.
செஞ்சூரியன் மைதானத்தைப் போன்று இந்த மைதானமானது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானம் என்று சொல்லப்படுகிறது. மேலும், மலைப்பகுதிகளுக்கு நடுவில் மைதானம் இருப்பதால், காற்றின் வேகம் இருக்க கூடும். இதனால், சுழற்பந்து வீச்சாளர்களும் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றலாம். ஆதலால் பேட்ஸ்மேன்கள் அதிக கவனத்துடன் களமிறங்கி விளையாடுவது அவசியமாகும். இந்திய அணியானது இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார்.
தென் ஆப்பிரிக்கா:
எய்டன் மார்க்ரம், டீன் எல்கர் (கேப்டன்), டோனி டி ஜோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரேனி, மார்கோ ஜான்சென், கேசவ் மகாராஜ், கஜிஸோ ரபாடா, நந்த்ரே பர்கர், லுங்கி நிகிடி.