ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி நேற்று நடந்தது. முதல் போட்டிகளில் தோல்வியை தழுவிய சன்ரைசர்ஸ் அணி, முதல் 2 போட்டிகளிலும் ஜெயித்த பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவானை தவிர மற்ற அனைவருமே படுமட்டமாக பேட்டிங் ஆடினர். பொறுப்புடன் நிலைத்து நின்று தனி ஒருவனாக அடித்து ஆடிய ஷிகர் தவான் 99 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தும் ஒரு ரன் கூடுதலாக அடிக்க முடியாததால் அவரால் சதமடிக்க முடியவில்லை. தவானை தவிரவேறு யாருமே சரியாக ஆடாததால் 20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே அடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
144 ரன்கள் என்ற இலக்கைவிரட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்கவீரர்கள் மயன்க் அகர்வால்(21) மற்றும் ஹாரி ப்ரூக்(10) சோபிக்கவில்லை. 3ம் வரிசையில் இறங்கிய ராகுல் திரிபாதியும் கேப்டன் மார்க்ரமும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி போட்டியை முடித்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ராகுல் திரிபாதி 48 பந்தில் 74 ரன்களை குவிக்க, 18வது ஓவரில் இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 99 ரன்கள் விளாசிய ஷிகர் தவான் தனித்துவ சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல்லில் ஒரு அணி அடித்த ஸ்கோரில் அதிகமான சதவிகித ரன்னை அடித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அடித்த ஸ்கோரில் (143), 69.23 சதவிகித ரன்னை தவான் ஒருவரேஅடித்தார். இந்த பட்டியலில் பிரண்டன் மெக்கல்லம் முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல்லின் முதல் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் அடித்த 222 ரன்களில் 158 ரன்கள்(71.17%) மெக்கல்லம் அடித்தது.