ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்துக்கான 3 விதமான போட்டிகளுக்குமான இந்திய அணி கடந்த 26ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த தொடருக்கான டி20 அணியில் சூர்யகுமார் யாதவின் பெயர் இடம்பெறாதது முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போட்டிகளிலும் ஐபிஎல்லிலும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்துவரும் சூர்யகுமார் யாதவ். ஆனாலும் அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டுவருகிறது.
ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி தொடர் என உள்நாட்டு தொடர்கள் அனைத்திலும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவரும் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல்லிலும் ஸ்கோர் செய்கிறார். கடந்த ஐபிஎல் சீசனில் 424 ரன்களையும், 2018 ஐபிஎல் சீசனில் 512 ரன்களையும் குவித்த சூர்யகுமார் யாதவ், இந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் 362 ரன்களை குவித்துள்ளார். போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பயனுள்ள இன்னிங்ஸை அணிக்காக ஆடுபவர் சூர்யகுமார் யாதவ். ஆனாலும் புறக்கணிக்கப்படுகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் புறக்கணிக்கப்பட்டதற்கு பிறகு, ஆர்சிபிக்கு எதிராக நடந்த போட்டியில், செலக்டார்ஸின் செவிட்டில் அறைந்தாற்போல அதிரடியான மற்றும் அற்புதமான ஒரு இன்னிங்ஸை ஆடினார். 43 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்து, மும்பை அணிக்கு வெற்றி பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்றபோதிலும், இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டுவரும் நிலையில், ஆர்சிபிக்கு எதிரான சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை கண்ட நியூசிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் ஸ்காட் ஸ்டைரிஸ், சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் விரும்பினால், அவருக்கு ஆட்சேபனை இல்லையென்றால், நியூசிலாந்து அணிக்காக ஆடலாம் என்று ஸ்டைரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.