சர்ச்சையை கிளப்பனுங்குறதுக்காகவே சம்மந்தம் இல்லாம பேசுறவன் சஞ்சய் மஞ்சரேக்கர்..! ஸ்ரீகாந்த் கடும் விளாசல்

First Published | Oct 29, 2020, 3:23 PM IST

கேஎல் ராகுலை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணியில் எடுத்தது குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரை ஸ்ரீகாந்த் கடுமையாக விளாசியுள்ளார்.
 

ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான, இந்திய டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.
எந்த அணியிலுமே ரோஹித் சர்மா இடம்பெறாதது, டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் சூர்யகுமார் யாதவுக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது ஆகியவை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Tap to resize

இந்நிலையில், கடந்த ஆண்டு டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த கேஎல் ராகுல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கும் நிலையில், ஐபிஎல்லில் சிறப்பாக ஆடியதை வைத்து டெஸ்ட் அணியில் எப்படி ராகுலை எடுக்க முடியும் என்று சஞ்சய் மஞ்சரேக்கர், ராகுலின் தேர்வு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
சஞ்சய் மஞ்சரேக்கரின் இந்த கருத்துடன் முரண்படும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான ஸ்ரீகாந்த், சஞ்சய் மஞ்சரேக்கரை கடுமையாக விளாசியுள்ளார்.
மஞ்சரேக்கரின் கருத்து குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், சஞ்சய் மஞ்சரேக்கருக்கு இதுதான் வேலை. வீரர்களின் திறமை குறித்து கேள்வி எழுப்பத்தான் தெரியும். அவர் பேசுவதை எல்லாம் கண்டுகொள்ளாதீர்கள். டெஸ்ட் அணியில் ராகுலின் தேர்வை எப்படி கேள்வி கேட்க முடியும். ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக ஆடியிருக்கிறார். அதனால் மஞ்சரேக்கரின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்பதற்காகவே எதையாவது கேட்கக்கூடாது. ராகுல் அனைத்து விதமான போட்டிகளிலும் அருமையாக ஆடியிருக்கிறார். அவரது ரெக்கார்டை எடுத்து பாருங்கள் என்று விளாசியுள்ளார் ஸ்ரீகாந்த்.
இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர தொடக்க வீரராக இருந்த ராகுல், 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து சரியாக ஆடவில்லை. 2018ல் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 299 ரன்கள் மட்டுமே அடித்தார். அதன்பின்னர் இந்தியாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 டெஸ்ட் தொடரில் 37 ரன்கள் மட்டுமே அடித்து படுமோசமாக சொதப்பினார். அதன்பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் வெறும் 57 ரன்களும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அடுத்த தொடரில் வெறும் 101 ரன்களும் மட்டுமே அடிக்க, அதன்பின்னர் நடந்த தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களிலும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் புறக்கணிக்கப்பட்டார் ராகுல்.
ராகுல் ஃபார்மில் இல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறியதை அடுத்து அணியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளாரே தவிர, ஐபிஎல்லில் நன்றாக ஆடி ஸ்கோர் செய்திருக்கிறார் என்று, ஐபிஎல்லின் அடிப்படையில் மட்டுமே அவர் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
இதுகுறித்து மேலும் பேசிய ஸ்ரீகாந்த், சஞ்சய் மஞ்சரேக்கர் பேசுவது சரியல்ல. ராகுல் கன்சிஸ்டண்ட்டாக ஆடுவதில்லை என்கிறார். இதே ராகுல் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானபோதே சதமடித்தார். ராகுல் ஃபாஸ்ட் பவுலிங்கை சிறப்பாக ஆடக்கூடியவர். எனவே ஆஸ்திரேலியாவில் அசத்துவார்.
சஞ்சய் மஞ்ரேக்கர் பாம்பேவை தாண்டி யோசிக்கவே மாட்டார். அதுதான் பெரிய பிரச்னையே.. நாமெல்லாம் நடுநிலையாக பேசுவோம். ஆனால் மஞ்சரேக்கர் பாம்பேவை தாண்டி யோசிக்கமாட்டார். மஞ்சரேக்கர் மாதிரியான ஆட்களுக்கு தெரிந்ததெல்லாம் பாம்பே, பாம்பே, பாம்பே தான்.. பாம்பேவை தாண்டியும் அவர்கள் யோசிக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் கடுமையாக விளாசியுள்ளார்.

Latest Videos

click me!