ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி முழுமையாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்தியா - ஆஸ்திரேலியா தொடருக்கான முழு போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் உலக கோப்பை வின்னிங் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டரின் அறிவுறுத்தல் மற்றும் எச்சரிக்கையையும் மீறி, பிசிசிஐயின் கோரிக்கைக்கு செவிமடுத்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் - ஜனவரி காலக்கட்டத்தில் டெஸ்ட் தொடர் நடக்கும். கிறிஸ்துமஸ் முடிந்து டிசம்பர் 26-30ல் மெல்போர்னில் நடக்கும் டெஸ்ட் போட்டியின் பெயர் பாக்ஸிங் டே டெஸ்ட். அதன்பின்னர் ஜனவரி முதல் வாரத்தில் சிட்னியில் நடக்கும் டெஸ்ட், பிங்க் டெஸ்ட். இதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா பாரம்பரியமாக பின்பற்றிவருகிறது.
ஆனால் பிசிசிஐ, சிட்னி டெஸ்ட்டை ஜனவரி 3ம் தேதிக்கு பதிலாக 7ம் தேதி தொடங்குமாறு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் பிசிசிஐ, மைண்ட் கேம் ஆடுகிறது என்றும், பிசிசிஐ பணக்கார கிரிக்கெட் வாரியம்தான் என்றாலும், அதற்காக மரபை மாற்றிக்கொள்ளக்கூடாது என்றும், அதனால் பிசிசிஐயின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல், வழக்கம்போல சிட்னி டெஸ்ட்டை ஜனவரி முதல் வாரத்திலேயே நடத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணிக்கு 1987ல் உலக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால் ஆலன் பார்டரின் அறிவுறுத்தலுக்கு செவிமடுக்காமல் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று, சிட்னி டெஸ்ட், ஜனவரி 7ம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.