
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணை உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவின் அணி தற்போது டிராபியை கைப்பற்றி சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கரீபியன் பிரீமியன் லீக் தொடரில் ப்ரீத்தி ஜிந்தாவின் அணியான செயின்ட் லூசியா கிங்ஸ் டிராபியை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்று ஒவ்வொரு நாட்டிலும் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2013 ஆம் ஆண்டு முதல் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 11 சீசன்களை வெற்றிகரமாக முடித்த கரீபியன் பிரீமியன் லீக் தொடரின் 12ஆவது சீசன் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த தொடரில் ப்ரீத்தி ஜிந்தாவின் அணியான செயின்ட் லூசியா கிங்ஸ் அணியும் இடம் பெற்று விளையாடியது.
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடிய 10 போட்டிகளில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 7 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. இதில் முதல் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு சென்றது. இதே போன்று கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு வந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய கயானா அமேசான் வாரியர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியில் நூர் அகமது 3 விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்தார்.
எளிய இலக்கை துரத்திய செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் 21 ரன்கல் எடுத்துக் கொடுக்க ரோஸ்டன் சேஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியாக செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக செயின்ட் லூசியா கிங்ஸ் முதல் முறையாக கரீபியன் பிரீமியர் லீக் டிராபியை கைப்பற்றியிருக்கிறது. அதுவும், ஆர்சிபிக்கு கேப்டனாக இருந்து ஒரு முறை கூட டிராபி ஜெயித்து கொடுக்காத ஃபாப் டூப்ளெசிஸ் முதல் முறையாக செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு டிராபி வென்று கொடுத்துள்ளார்.
இதன் மூலமாக அணியின் உரிமையாளராக ப்ரீத்தி ஜிந்தா இந்த நாளில் வழக்கத்திற்கு மாறாக மற்ற நாட்களை விட அதிகளவில் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால், ஒரு ஓரத்தில் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் டிராபி ஜெயிக்கவில்லையே என்ற வருத்தமும் அவர் மனதில் இருக்கிறது. ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இணைந்திருக்கிறார்.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு அணியும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதிலேயும் ஆர்சிபி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மட்டுமே இதுவரையில் டிராபி கைப்பற்றாத நிலையில் அந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும், யாரையெல்லாம் விடுவிக்கும் ஏலத்தில் யாரையெல்லாம் எடுக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது.