Vaibhav Sooryavanshi: பீகாரில் உள்ள வைபவ் சூர்யவன்ஷியின் பூர்வீக வீடு, அவரது போராட்டம், ஒழுக்கம் மற்றும் குடும்ப ஆதரவின் அடையாளம். இந்த எளிமையான வீடு, அவரது கிரிக்கெட் பயணத்தை எப்படி வடிவமைத்தது என்பதைப் பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட்டின் இளம் அசுரனாக உருவெடுத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. வெறும் 15 வயதில் அசாத்திய உயரங்களை அவர் தொட்டிருந்தாலும் இதற்கு பின்னால் அவரது கடின உழைப்பும், குடும்பத்தினரின் அர்ப்பணிப்பும் இருக்கிறது.
சமஸ்திபூர் மாவட்டம், தாஜ்பூரில் உள்ள மோதிப்பூர் கிராமத்தில்தான் வைபவ் சூர்யவன்ஷியின் இந்த இரண்டு மாடி வீடு இருக்கிறது. பசுமை நிறைந்த, திறந்தவெளி சூழலில் அமைந்துள்ள இந்த வீடு, ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தின் வாழ்க்கையை காட்டுகிறது. ஆடம்பரத்தை விட, அத்தியாவசியத் தேவைகளுக்காகவே இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. ஒரு சிறிய பால்கனி, எளிமையான சுற்றுப்புறம் எனப் பார்க்கவே யதார்த்தமாக இருக்கிறது.
26
விடாமுயற்சியின் சின்னம்
இந்த வீட்டின் சிறப்பு அதன் கட்டிடக்கலையில் இல்லை, அது சொல்லும் சேதியில்தான் இருக்கிறது. வீட்டின் ஒவ்வொரு மூலையும் விடாமுயற்சி, நம்பிக்கை, மற்றும் அமைதியான உழைப்பின் கதையைச் சொல்கிறது. குறைந்த வசதிகள் இருந்தபோதிலும், வைபவின் குடும்பம் அவரது கிரிக்கெட் கனவுகளுக்குத் துணை நின்றது. இந்த வீடு, அவர்களின் உறுதி மற்றும் தியாகத்தின் சின்னமாக மாறியது.
36
இளமைக் காலமும் குடும்ப ஆதரவும்
வைபவ், 2011 மார்ச் 27 அன்று தாஜ்பூரில் பிறந்தார். வசதிகளை விட லட்சியங்கள் பெரிதாக இருந்த ஒரு குடும்பத்தில் அவர் வளர்ந்தார். அவரது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி, ஒரு காலத்தில் கிரிக்கெட்டராக ஆசைப்பட்டவர். அவர் தன் மகனின் திறமையை ஆரம்பத்திலேயே கண்டறிந்தார். அன்று முதல், நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும், வைபவின் கிரிக்கெட் பயணத்திற்கு ஆதரவளிப்பதே அந்த குடும்பத்தின் வாழ்க்கையாக மாறியது.
இந்த வீட்டின் மிக முக்கியமான அம்சம், வீட்டுக்கு அருகிலேயே கட்டப்பட்ட பயிற்சி பகுதிதான். வைபவின் தந்தை, அவருக்காகவே ஒரு பிரத்யேக கிரிக்கெட் நெட் அமைத்துக் கொடுத்தார். வேகப்பந்து வீச்சுக்கு கான்கிரீட் பிட்ச், போட்டி சூழலை உணர புல் தரை விக்கெட் என இரண்டையும் உருவாக்கினார். பெரிய அகாடமிகளுக்குச் செல்ல முடியாத நிலையில், இந்த வீட்டு மைதானம்தான் வைபவின் திறமைகளைத் தீட்டிக்கொள்ள உதவியது.
56
குடும்பத்தின் தியாகங்கள்
வைபவின் இந்த வளர்ச்சிக்குப் பின்னால் மிகப்பெரிய தியாகங்கள் உள்ளன. அவரது தந்தை, பயிற்சிகள், உபகரணங்கள் மற்றும் பயணச் செலவுகளுக்காக, தங்கள் பூர்வீக நிலத்தின் ஒரு பகுதியை விற்றதாகக் கூறப்படுகிறது. அவரது தாய் தினமும் அதிகாலை 3 மணிக்கே எழுந்து உணவு தயாரித்து, மகனின் ஒழுக்கத்தையும் வழக்கத்தையும் உறுதி செய்தார். இருவரின் கூட்டு முயற்சியும் இந்த வீட்டை அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் மையமாக மாற்றியது.
66
சொத்து மதிப்பும் மும்பை வீடும்
No Broker தளத்தின்படி, பீகாரில் உள்ள இந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வைபவ் தனது வேர்களை மறக்கவில்லை என்றாலும், ஐபிஎல் மூலம் கிடைத்த வெற்றியால், மும்பையில் ரூ.2.5 முதல் ரூ.3 கோடி மதிப்புள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். ஆனாலும், அவரது பூர்வீக வீடுதான் அவரது பயணத்தின் அஸ்திவாரம். எளிய தொடக்கங்களில் இருந்து எப்படி பெரிய கனவுகள் உருவாகும் என்பதற்கு இதுவே சாட்சி.