
இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா திடீரென்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் தோல்வியே காரணமாக சொல்லப்படுகிறது.
மேலும், அந்த டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபெர்பாமன்ஸ் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அப்போதே ரோகித் சர்மா மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்தது. மேலும், அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்தது. இந்திய அணியின் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
இதன் மூலமாக அதிகப்படியான விமர்சனங்களை ரோகித் சர்மா எதிர்கொண்டார். தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரோகித் சர்மா வரும் ஜூன் மாதம் தொடங்கும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறுவாரா? இல்லையா என்பது கேள்விக்குறியாகியிருந்தது.
வரும் ஜூன் 20ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர தொடங்கும் நிலையில் விரைவில் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட இருக்கின்றனர். அதற்கு முன்னதாக ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், ஒருநாள் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து இந்திய அணியை முன்னிலைப்படுத்துவேன் என்று கூறியுள்ளார். இதன் மூலமாக அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று தெரிகிறது.
38 வயதில், ரோகித் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,301 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 12 சதங்கள், 18 அரைசதங்கள் அடங்கும். டெஸ்ட் போட்டிக்காக 6 ஆண்டுகள் காத்திருந்தார். 108 ஒருநாள் போட்டிகள் விளையாடிய பின் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
2010ல் நாக்பூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தபோது, டாஸுக்கு முன்பு வார்ம் அப் பயிற்சியின் போது காயமடைந்தார். 2013 நவம்பர் 7 அன்று வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டெஸ்டில் அறிமுகமானார். இது சச்சின் டெண்டுல்கரின் பிரியாவிடை தொடர். ரோஹித் தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் 177 ரன்கள் எடுத்தார்.
இவ்வளவு காலம் காத்திருந்த பிறகு இவ்வளவு பெரிய அளவில் அறிமுகமாகியது மறக்க முடியாதது என்று ரோகித் அப்போது கூறினார். அதன் பிறகு சில ஆண்டுகள் ரோகித் டெஸ்ட் அணியில் நிலையான இடத்தைப் பிடிக்கவில்லை. ஆனால் 2019ல் தொடக்க ஆட்டக்காரராக மீண்டும் அணிக்குள் வந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 176, 127 ரன்கள் எடுத்தார். 2023ல் டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியாவை அழைத்துச் சென்றார்.
2023 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித், இப்போது டெஸ்டில் இருந்தும் விலகியுள்ளார். இதன் மூலம் ரோகித்தின் கிரிக்கெட் வாழ்க்கை ஒருநாள் போட்டிகளுடன் முடிவடையும். 108 ஒருநாள் போட்டிகள் விளையாடி டெஸ்டில் அறிமுகமான வீரராகவும், முதல் போட்டியிலேயே சதம் அடித்த வீரராகவும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.