
ஐபிஎல் 2025 மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை விட 2025 ஆம் ஆண்டு விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனியர் வீரர்கள் கழற்றிவிடப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று ஐபிஎல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரர்கள் வரும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஏலத்தின் மூலமாக வேறு அணிக்கு மாறும் வாய்ப்புகளும் உண்டு. இல்லையென்றால் ஐபிஎல் டிரேட் மூலமாக வேறு அணியில் ஒப்பந்தம் செய்யப்படலாம்.
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இடம் பெற்று விளையாடி வந்து 5 முறை டிராபி வென்று கொடுத்த ரோகித் சர்மா 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்
ஆனால், அதற்கு தரமான பதிலடியாக ஐபிஎல் 2024 தொடர் அமைந்தது. அதோடு, தன்னை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது பெரிய தவறு என்பதை டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்து ரோகித் சர்மா நிரூபித்து காட்டினார்.
டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்களான ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் அதிக முக்கிய பங்கு வகித்தனர். ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் பிடித்த அழகான கேட்ச் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
ஹர்திக் பாண்டியாவிற்கு கடைசி ஓவர் கொடுக்க முக்கிய காரணம் ரோகித் சர்மாவின் கேப்டன்ஸி. இப்படி தனது கேப்டன்ஸி மூலமாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகிகளுக்கு தரமான பதிலடி கொடுத்தார்.
மேலும் தோனிக்கு பிறகு 2ஆவது முறையாக இந்திய அணிக்கு டிராபி வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். இதற்கு முன்னதாக கேப்டனாக இருந்த விராட் கோலியால் கூட இந்த சாதனையை படைக்க முடியவில்லை.
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் தன்னை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது ரோகித் சர்மாவிற்கு கவலையை அளித்துள்ளது. அவருக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களும் வேதனையில் இருக்கின்றனர். இதையும் தாண்டி ரோகித் சர்மாவை அணியிலிருந்தே நீக்க மும்பை இந்தியன்ஸ் தீர்மானித்துவிட்டதாக ஐபிஎல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
முன்னாள் வீரர்களும் ரோகித் சர்மா ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இடம் பெற்றால் அதிக தொகைக்கு ஏலம் எடுக்க ஒவ்வொரு அணியும் போட்டி போடும் என்று கூறி வருகின்றனர். இதன் காரணமாக ரோகித் சர்மாவின் சம்பளம் ரூ. 16 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ரூ.9.20 கோடியில் ஆரம்பித்த ரோகித் சர்மா தற்போது 16 கோடியில் வந்து நிற்கிறார்.
இந்த நிலையில் தான் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் விடுவிடுக்க தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது மட்டும் நடந்தால் இவர்களை ஏலத்தில் எடுக்கும் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம்.
ரோகித் சர்மா:
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை டிராபி வென்று கொடுத்த ஒரே கேப்டன் ரோகித் சர்மா. ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிறகு மும்பை இந்தியன்ஸ் எக்ஸ் பக்கத்தில் 400,000 பின்தொடர்பவர்களை இழந்தது. இதுவரையில் 257 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 43 அரைசதங்கள், 2 சதங்கள் உள்பட 6628 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யகுமார் யாதவ்:
டி20 கிரிக்கெட்டில் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 139 போட்டிகளில் 124 இன்னிங்ஸ் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 3250 ரன்கள் குவித்துள்ளார். சூர்யகுமார் யாதவை கேகேஆர் அணியானது ஏலத்தில் எடுக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கேப்டன் பொறுப்பும் கொடுக்க ஆசையோடு காத்திருக்கிறது என்று ஐபிஎல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதே போன்று ஷ்ரேயாஸ் ஐயரை மும்பை இந்தியன்ஸ் ஏலம் வாங்க ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் டிரேட் மூலமாக மாற்றப்பட்டால் அவர்களது பேட்டிங் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள். ஆனால், இதெல்லாம் நடக்குமா என்பது சந்தேகம் தான்.
இஷான் கிஷான்:
இஷான் கிஷானும் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்படலாம். ஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய இஷான் கிஷான், இந்திய அணியிலும் இடம் பெறவில்லை. மேலும், பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலிலும் இஷான் கிஷான் இடம் பெறவில்லை. இதன் காரணமாக இந்திய அணியில் இடம் பெற புச்சி பாபு கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
ஆனால், இது போதுமானதாக இருக்குமா என்பது சந்தேகம் தான். ஐபிஎல் 2024ல் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடிய இஷான் கிஷான் 14 போட்டிகளில் மொத்தமாக 320 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனினும், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பதால், இருவரும் நெருக்கம் என்பதால், அவரை தக்க வைத்து கொள்ள பாண்டியா அடிபோடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.