
Rohit Sharma Ritika Sajdeh Son Name Revealed : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் இரண்டாவது குழந்தையின் பெயர் என்ன என்று அறிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் ரோகித்தின் மனைவி ரித்திகா சஜ்தே தனது இரண்டாவது குழந்தையின் பெயரை வெளியிட்டுள்ளார்.
ரோகித்தின் முதல் குழந்தை பெண் குழந்தை. அவளுடைய பெயர் சமீரா. இப்போது இரண்டாவது குழந்தைக்கு அஹான் Ahaan என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயருக்கு பல அர்த்தங்கள் உள்ளன. புனிதமான விடியல், சூரிய உதயம், காலையின் அழகு, சூரியனின் முதல் ஒளி, எந்தவொரு தொடக்கம் அல்லது எழுச்சி.
ரோகித்தின் குடும்பத்தில் இப்போது நான்கு உறுப்பினர்கள். இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அந்த நான்கு பேரையும் ரித்திகா குறிப்பிட்டுள்ளார். அவர் நான்கு பொம்மைகளின் படங்களைப் பகிர்ந்துள்ளார். முதல் பொம்மையின் தொப்பியில் ஆஹான், இரண்டாவது பொம்மையின் தொப்பியில் ரிட்ஸ், மூன்றாவது பொம்மையின் தொப்பியில் சாமி மற்றும் நான்காவது பொம்மையின் தொப்பியில் ரோ என்று எழுதப்பட்டுள்ளது. இந்தப் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் ரோகித் மற்றும் ரித்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் ரோகித் சர்மா:
இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் மனைவியுடன் இருக்க, பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் விளையாடவில்லை. இருப்பினும், இந்தப் போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே அவர் இந்திய அணியில் இணைந்தார். கான்பெராவின் மனுக்கா ஓவலில் ஆஸ்திரேலிய பிரதமர் XI அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் ரோகித் விளையாடினார். முதல் இன்னிங்ஸில் 11 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து இந்திய அணியின் கேப்டன் ஆட்டமிழந்தார்.
இந்த இன்னிங்ஸில் அவர் 4வது வரிசையில் பேட்டிங் செய்தார். பெர்த் டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடினர். இந்த தொடக்க ஜோடியை ரோகித் பிரிக்க விரும்பவில்லை. இதனால்தான் அவர் தொடக்க ஆட்டக்காரராக இறங்காமல் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்தார். இதே போன்று வரும் 6ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கும் 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் ரோகித் சர்மா 4ஆவது வரிசையில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று கான்பெராவில் நடைபெற்ற பிரைம் மினிஸ்டர்ஸ் XIக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதில், தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸ் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் விளையாடிய இந்திய அணி 46 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில், சுப்மன் கில் 27 ரன்னிலும், கேஎல் ராகுல் 50 ரன்னிலும் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் ஆட்டமிழந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45, நிதிஷ் ரெட்டி 42, வாஷிங்டன் சுந்தர் 42 ரன்கள் எடுத்தனர். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு இந்திய அணிக்காக முதல் போட்டியில் விளையாடியுள்ளார் ரோஹித் சர்மா. ஆஸ்திரேலிய பிரதமர் XI அணிக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை இந்திய அணியின் கேப்டன்.