
சனிக்கிழமை நள்ளிரவில் பெங்களூரு நகரமே ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. எம். சின்னசாமி மைதானத்தில் போட்டி முடிந்த பிறகு ஆர்சிபியின் அணி பேருந்து புறப்படுவதைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே காத்திருந்தனர். பேருந்துக்கு இடையூறு ஏற்படாதவாறு போலீசார் பாதுகாப்பு அளித்தனர். சில ரசிகர்கள் வீரர்களைப் பார்க்க பேருந்துக்கு குறுக்கே வந்ததால், லேசான தடியடி நடத்த வேண்டியதாயிற்று.
இதன் வீடியோவை ஆர்சிபி வெளியிட்டுள்ளது. 12.30 மணிக்கு பேருந்தில் வீரர்கள் புறப்படும்போது ரசிகர்களின் உற்சாகக் கோஷம் நிற்கவில்லை. "நம்பமுடியாத அனுபவம் இது, மக்களின் ஆர்வம், எங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பு. ஆர்சிபி என்றால் இவ்வளவு அன்பு. எங்களுக்கு இவ்வளவு ஆதரவு தருபவர்களுக்கு நாங்கள் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும். நாங்கள் வென்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!" என்று க்ருனால் பாண்டியா கூறுகிறார். இது அற்புதமானது. முதல் முறையாக இப்படி ஒரு அனுபவம் கிடைத்தது. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று ஆல்ரவுண்டர் க்ருனால் கூறியுள்ளார்.
ஆர்சிபி பேருந்து மெதுவாகச் செல்லும்போது, “RCB! RCB!” என்ற கோஷங்கள் சாலைகளில் எதிரொலித்தன. போலீசார் பேருந்துக்கு வழிவிட தங்கள் வாகனத்தில் முன்னே செல்ல, ரசிகர்கள் சிவப்பு-மஞ்சள் கொடிகளை அசைத்துக்கொண்டு பேருந்தை பைக்குகளில் பின்தொடர்ந்தனர். சில பைக் ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதால், “இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைத்து ரசிகர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும்” என்ற செய்தியை ஆர்சிபி வெளியிட்டுள்ளது. ஆனால் கொண்டாட்டத்தில் இந்த எச்சரிக்கை செய்தி எட்டியிருக்குமா என்பது சந்தேகம்.
இந்த முக்கியமான வெற்றியால் ஆர்சிபி 2025 ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. விராட் கோலியின் அற்புதமான பேட்டிங், ஷெப்பர்டின் அதிரடி ரன்கள் மற்றும் யஷ் தயால் வீசிய கடைசி ஓவர் ஆகியவை அணியின் வெற்றிக்குக் காரணமாயின. ஆர்சிபி இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையைக் கூட வெல்லவில்லை என்றாலும், அணி ரசிகர்களின் நம்பிக்கை எப்போதும் வலுவாகவே உள்ளது. இந்த நம்பிக்கையும் ஆர்வமும்தான் ஆர்சிபியை 18 ஆண்டுகளாக முன்னோக்கி நகர்த்துகிறது.
ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு எதிரான போட்டியில் ஆர்சிபியின் ரொமாரியோ ஷெப்பர்ட் வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது ஆர்சிபி அணிக்காக அதிவேக அரைசதம், ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக அரைசதம். ராஜஸ்தானின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்தது இன்னும் சாதனையாக உள்ளது. கே.எல். ராகுல், பாட் கம்மின்ஸ் ஆகியோரும் 14 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர். ஆர்சிபி அணிக்கான அதிவேக அரைசதம் சாதனை இதுவரை கிறிஸ் கெயில் பெயரில் இருந்தது. அவர் 2013இல் புனே அணிக்கு எதிராக 17 பந்துகளில் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.
ஆர்சிபி மற்றும் சென்னை ரசிகர்களுக்கு இடையிலான மோதல் மற்றொரு கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் சென்னை மைதானத்தில் லாலிபாப் காட்டி ஆர்சிபி ரசிகர்களை சென்னை ரசிகர்கள் கேலி செய்தனர். இதற்குப் பதிலடியாக சனிக்கிழமை சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ரசிகர்கள் சென்னை அணியின் ‘சிறைச்சீருடையை’ விற்பனை செய்தனர். சூதாட்டப் பிரச்சினையில் சென்னை அணி 2016, 2017 ஐபிஎல் தொடர்களில் இருந்து தடை செய்யப்பட்டிருந்தது. இதை நினைவூட்டும் வகையில் மைதானத்திற்கு வெளியே கருப்பு-வெள்ளை நிறத்தில், 2016-17 என்று எழுதப்பட்ட சீருடைகளை விற்பனை செய்தனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
சனிக்கிழமை சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கோலி சாதனைகளைப் படைத்தார். அதிரடியாக விளையாடிய கோலி, 33 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஐபிஎல்லில் 8500 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் இதுவரை 263 போட்டிகளில் 255 இன்னிங்ஸ்களில் 8509 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ரன்கள் பட்டியலில் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்தில் உள்ளார். அவர் 267 போட்டிகளில் 6921 ரன்கள் எடுத்துள்ளார். ஷிகர் தவான் 222 போட்டிகளில் 6769 ரன்கள், டேவிட் வார்னர் 184 போட்டிகளில் 6565 ரன்கள் எடுத்துள்ளனர்.
டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 300+ சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். அவர் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் உட்பட மொத்தம் 278 போட்டிகளில் 304 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஒரு அணிக்காக அதிக சிக்ஸர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவர் ஆர்சிபிக்காக 263 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ரோஹித் சர்மா மும்பைக்காக 262, கீரன் பொல்லார்ட் மும்பைக்காக 258, எம்.எஸ். தோனி சிஎஸ்கேவுக்காக 257 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.
சென்னைக்கு எதிராக அதிக
50+, கோலி முதலிடம்
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக முறை 50+ ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் சென்னைக்கு எதிராக 10 முறை இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலம் ஷிகர் தவான், ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னரை முந்தினார். இந்த மூவரும் தலா 9 முறை 50+ ரன்கள் எடுத்துள்ளனர்.
ஒரு அணிக்கு எதிராக
அதிக ரன்கள் சாதனை
ஐபிஎல்லில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். அவர் சென்னைக்கு எதிராக 1146 ரன்கள் எடுத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிராக டேவிட் வார்னர் 1134 ரன்கள் எடுத்திருந்தார், அவரை கோலி முந்தினார். டெல்லிக்கு எதிராக விராட் கோலி 1130, பஞ்சாப் அணிக்கு எதிராக கோலி 1104, கொல்கத்தாவுக்கு எதிராக வார்னர் 1093, கொல்கத்தாவுக்கு எதிராக ரோஹித் 1083 ரன்கள் எடுத்துள்ளனர்.
8 சீசன்களில் தலா 500 ரன்கள்:
வார்னர் சாதனையை முறியடித்த கோலி விராட் கோலி 18 ஐபிஎல் சீசன்களில் 8இல் தலா 500+ ரன்கள் எடுத்து, இந்தச் சாதனையைப் படைத்த முதல் வீரர் ஆவார். அவர் 2011, 2013, 2015, 2016, 2018, 2023, 2024 மற்றும் 2025இல் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். டேவிட் வார்னர் 7, கே.எல். ராகுல் 6 சீசன்களில் தலா 500+ ரன்கள் எடுத்துள்ளனர்.
04வது முறை:
கோலி தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் அடித்தார். ஆர்சிபி அணிக்காக அவர் இரண்டாவது முறையாக இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். 2016இலும் தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் அடித்திருந்தார்.