
RCB vs CSK IPL 2025 Match Highlights : பெங்களூரு சின்னச்சுவாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி நாங்கள் பவுலிங் செய்கிறோம் என்று அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி பொறுப்பை உணர்ந்து விளையாடி 213/5 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்களான விராட் கோலி மற்றும் ஜாக்கோப் பெத்தெல் இருவரும் நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் சேர்த்தனர். பெத்தெல் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று விராட் கோலியும் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 62 ரன்கள் குவித்தார்.
கடைசியில் வந்த ரொமாரியா ஷெப்பர்டு 14 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்சர் விளாசி குறைவான பந்துகளில் அரைசதம் (53 ரன்கள்) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகீஷா பத்திரனா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். நூர் அகமது ஒரு விக்கெட் எடுத்தார்.
பின்னர் கடின இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷேக் ரஷீத் மற்றும் ஆயுஷ் மாத்ரே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரஷீத் 14 ரன்களில் நடையை கட்ட, சாம் கரண் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். மாத்ரே மற்றும் ஜடேஜா இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் எடுத்து கொடுத்தது. அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 6 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். என்றாலும், சிஎஸ்கே அணியில் தனது திறமையை நிரூபித்துக் காட்டியுள்ளார். மேலும், சிஎஸ்கே 200 ரன்களை எட்டவும் உதவினார்.
மாத்ரே 48 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்ஸர் உள்பட 94 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய மாத்ரே 25 பந்துகளில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர், 17 வயது 291 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா 21 வயது 148 நாட்களில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
அவருக்கு பிறகு வந்த டெவால்ட் பிரேவிஸ் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இறுதியாக ஜடேஜா உடன் தோனி ஜோடி சேர்ந்தார். ஆனாலும் அவர் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. இறுதியாக சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி 12 பந்துகளுக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. தோனி மற்றும் ஜடேஜா இருவரும் களத்தில் நின்றனர்.
போட்டியின் 19அவது ஓவரை ஜடேஜா வீசினார். முதல் பந்திலேயே கொடுத்த கேட்ச் வாய்ப்பை விராட் கோலி நழுவவிட்டார். அந்த பந்து பவுண்டரிக்கு சென்றது. இதே போன்று 5ஆவது பந்தை தோனி சிக்சருக்கு விரட்டினார்.
இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு (ஆர்சிபிக்கு) எதிராக 50 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்தார். அந்த ஓவரில் மட்டும் சிஎஸ்கே 14 ரன்கள் எடுத்தது.
இறுதியாக 6 பந்துகளுக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. யாஷ் தயாள் அந்த ஓவரை வீசினார். முதல் 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் 3ஆவது பந்தில் தோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார. ரெவியூவும் எடுத்தார். ஆனாலும் அவுட்டு தான் வந்தது. எஞ்சிய 3 பந்துகளுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. இம்பேக்ட் பிளேயராக ஷிவம் துபே களமிறங்கினார். முதல் பந்தையே நோபாலாக வீசினார். அந்த பந்தில் ஷிவம் துபே சிக்ஸர் அடித்தார்.
கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிஎஸ்கே கடைசி 3 பந்திலும் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட சிஎஸ்கே 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இறுதியாக சிஎஸ்கே 211/5 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக சிஎஸ்கே அணிக்கு எதிரான 2 போட்டியிலும் ஆர்சிபி வெற்றி பெற்றது.
அதோடு இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி 16 புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. இதுவரையில் விளையாடிய 11 போட்டிகளில் ஆர்சிபி 8 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்துள்ளது. ஏற்கனவே விளையாடிய 10 போட்டிகளில் 8 தோல்விகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறிய சிஎஸ்கே அணி இப்போது 9 ஆவது போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.