ஒரு விக்கெட்டுக்காக போராட்டம் – டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றி ரவீந்திர ஜடேஜா சாதனை!

First Published | Sep 30, 2024, 4:12 PM IST

Ravindra Jadeja, IND vs BAN 2nd Test, Kanpur, கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா 300 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். இந்திய அணி அதிவேக 50 ரன்கள் மற்றும் அதிவேக 100 ரன்கள் எடுத்தும் புதிய சாதனைகளைப் படைத்தது.

India vs Bangladesh 2nd Test

கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் எடுப்பதற்கு போராடிய ரவீந்திர ஜடேஜா கடைசியில் 10ஆவது விக்கெட்டாக கலீல் அகமது விக்கெட்டை கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 7ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில், மழையின் காரணமாக முதல் 3 நாட்கள் போட்டி கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும், டாஸ் வென்ற இந்தியா பவுலிங் செய்தது. வங்கதேசம் முதல் நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது. இதில் மோமினுல் ஹக் 40 ரன்கள் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் 6 ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

IND vs BAN 2nd Test, Kanpur

இதையடுத்து 2 ஆவது மற்றும் 3ஆவது நாட்கள் போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் 4ஆவது நாள் போட்டி இன்று காலை தொடங்கப்பட்டது. மோமினுல் மற்றும் முஷ்பிகுர் இருவரும் 4ஆவது நாள் போட்டியை தொடர்ந்தனர். ரஹீம் 11 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த வங்கதேச வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மோமினுல் ஹக் 194 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 107 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ரவீந்திர ஜடேஜா 300 விக்கெட்டுகள்:

இந்தப் போட்டியில் கடைசியாக கலீல் அகமது விக்கெட்டை எடுத்ததன் மூலமாக ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய 7ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 3ஆவது இந்திய வீரரானார். அதிவேகமாக இந்த சாதனையை நிகழ்த்திய 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இங்கிலாந்து வீரர் இயான் போதம் 72 போட்டிகளில் 3000 ரன்கள் கடந்து 300 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜடேஜா 73 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

Latest Videos


Ravindra Jadeja 300 Wickets

இதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே (619 விக்கெட்டுகள்), ரவிச்சந்திரன் அஸ்வின் (524 விக்கெட்டுகள்), கபில் தேவ் (434 விக்கெட்டுகள்), ஹர்பஜன் சிங் (417 விக்கெட்டுகள்), இஷாந்த் சர்மா (311) மற்றும் ஜாகீர் கான் (311) விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கின்றனர். இந்த மைல்கல்லை எட்டுவதற்கு ரவீந்திர ஜடேஜா 17,428 பந்துகள் எடுத்துக் கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த மைல்கல்லை வெறும் 15,636 பந்துகளில் எட்டியிருக்கிறார்.

கடைசியில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்தது. ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

Rohit Sharma, IND vs BAN 2nd Test

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 ரன்கள் கடந்து இந்தியா சாதனை:

விக்கெட் இழப்பின்றி அதிவேகமாக 51 ரன்கள் குவித்து சாதனை புத்தகத்தில் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் இடம் பெற்றனர். இந்த போட்டியில் 11 பந்துகளில் 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் எடுத்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அதன் பிறகு அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 28 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 48 ரன்கள் எடுத்தார். கடைசியில் 31 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

அதிவேகமாக அரைசதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்:

இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள்:

28 பந்துகள் – ரிஷப் பண்ட் vs இலங்கை, பெங்களூரு Bengaluru 2022
30 பந்துகள் கபில் தேவ் vs பாகிஸ்தான், கராச்சி Karachi 1982
31 பந்துகள் – ஷர்துல் தாக்கூர் vs இங்கிலாந்து The Oval 2021
31 பந்துகள் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் vs வங்கதேசம் Kanpur 2024
32 பந்துகள் – வீரேந்திர சேவாக் vs இங்கிலாந்து Chennai 2008

தொடர்ந்து தனது அதிரடியை ஜெய்ஸ்வால் காட்டவே இந்தியா 10.1 ஓவர்களில் சரித்திரம் படைத்தது. 10.1 ஓவர்களில் 103 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ரன்களை கடந்த முதல் அணியாக இந்த சாதனையை தற்போது இந்தியா படைத்துள்ளது.

இதற்கு முன்னதாகவும் இந்தியா 12.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்திருந்தது. 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 100 ரன்களை கடந்து சாதனை படைத்திருந்தது. இந்த சாதனையை தற்போது இந்தியாவே முறியடித்துள்ளது.

IND vs BAN, Kanpur 2nd Test

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ரன்களை கடந்த இந்தியா:

10.1 ஓவர்கள் - இந்தியா vs வங்கதேசம், கான்பூர் 2024
12.2 ஓவர்கள் – இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், போர்ட் ஆஃப் ஸ்பெயின் 2023
13.1 ஓவர்கள் - இலங்கை vs வங்கதேசம், கொழும்பு 2001
13.4 ஓவர்கள் – வங்கதேசம் vs வெஸ்ட் இண்டீஸ், மிர்பூர் 2012
13.4 ஓவர்கள் – இங்கிலாந்து vs பாகிஸ்தான், கராச்சி 2022
13.4 ஓவர்கள் – இங்கிலாந்து vs பாகிஸ்தான், ராவல்பிண்டி 2022
13.6 ஓவர்கள் - ஆஸ்திரேலியா vs இந்தியா, பெர்த், 2012

கடைசியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 72 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று சுப்மன் கில் 36 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது வரையில் இந்தியா 29 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. ரிஷப் பண்ட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

click me!