
டெஸ் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சரித்திர சாதனையை தற்போது வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா படைத்துள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட்டா, டி20 கிரிக்கெட்டா என்றே ஆச்சரியப்படும் அளவிற்கு 10.1 ஓவர்களில் 103 ரன்கள் குவித்து வரலாற்று சாதனையை டீம் இந்தியா படைத்திருக்கிறது.
வங்கதேசம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலாவதாக இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் முக்கிய காரணமாக இருந்தனர். முதல் இன்னிங்ஸில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர்.
ரவீந்திர ஜடேஜா 86 ரன்களில் ஆட்டமிழக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் 2ஆவது இன்னிங்ஸிலும் ரிஷப் பண்ட் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சுப்மன் கில் 119 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும் இந்தப் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.
இதையடுத்து கான்பூரில் இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் 41 ஆண்டுகள் வரலாற்றில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. அதே வரலாற்றை தக்க வைக்க டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
ஆனால், 60 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு கேப்டனும் செய்யாத சாதனையை பவுலிங் தேர்வு செய்து ரோகித் சர்மா படைத்தார். இந்த மைதானத்தில் டாஸ் வென்ற கேப்டன்கள் முதலில் பேட்டிங்கையே அதிகம் தேர்வு செய்திருக்கின்றனர். முதலில் நாளில் பெய்த மழையின் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்டு முன்கூட்டியே முடிக்கப்பட்டது.
முதல் நாள் முடிவில் வங்கதேசம் 35 ஓவர்கள் பேட்டிங் செய்து 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது. மோமினுல் ஹக் 40 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹீம் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 2ஆவது மற்றும் 3 ஆவது நாட்கள் மழை மற்றும் போதிய வெளிச்சமின்கை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வானம் கிளியராக தெரிந்ததைத் தொடர்ந்து 4ஆவது நாள் போட்டி இன்று தொடங்கப்பட்டது.
இதில், மோமினுல் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் இருவரும் 4ஆவது நாள் போட்டியை தொடர்ந்தது. இதில், ரஹீம் 11 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த வங்கதேச வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால், கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மோமினுல் ஹக் 194 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 107 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ரவீந்திர ஜடேஜா 300 விக்கெட்டுகள்:
இந்தப் போட்டியில் கடைசியாக கலீல் அகமது விக்கெட்டை எடுத்ததன் மூலமாக ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 3ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஆனால், அதிவேகமாக இந்த சாதனையை நிகழ்த்திய 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். இங்கிலாந்து வீரர் இயான் போதம் 72 போட்டிகளில் 3000 ரன்கள் கடந்து 300 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜடேஜா 73 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே (619 விக்கெட்டுகள்), ரவிச்சந்திரன் அஸ்வின் (524 விக்கெட்டுகள்), கபில் தேவ் (434 விக்கெட்டுகள்), ஹர்பஜன் சிங் (417 விக்கெட்டுகள்), இஷாந்த் சர்மா (311) மற்றும் ஜாகீர் கான் (311) விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கின்றனர்.
இறுதியாக வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்தது. பும்ரா 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ரோகித் சர்மா சந்தித்த முதல் 2 பந்திலேயே 2 சிக்ஸர்கள்:
தொடக்க முதலே டெஸ்டா அல்லது டி20 கிரிக்கெட்டா என்று கேட்கும் அளவிற்கு இருவரும் அதிரடி காட்டினர். ரோகித் சர்மா சந்தித்த முதல் 2 பந்திலேயே 2 சிக்ஸர் விளாசி சச்சின் டெண்டுல்கர் (2013) மற்றும் உமேஷ் யாதவ் (2019) ஆகியோரது 2 பந்துகளில் 2 சிக்சர்கள் சாதனையை சமன் செய்தார். 3 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 ரன்கள் கடந்து இந்தியா சாதனை:
விக்கெட் இழப்பின்றி அதிவேகமாக 51 ரன்கள் குவித்து சாதனை புத்தகத்தில் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் இடம் பெற்றனர். இந்த போட்டியில் 11 பந்துகளில் 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் எடுத்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அதன் பிறகு அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 28 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 48 ரன்கள் எடுத்தார். கடைசியில் 31 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
அதிவேகமாக அரைசதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்:
இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள்:
28 பந்துகள் – ரிஷப் பண்ட் vs இலங்கை, பெங்களூரு Bengaluru 2022
30 பந்துகள் கபில் தேவ் vs பாகிஸ்தான், கராச்சி Karachi 1982
31 பந்துகள் – ஷர்துல் தாக்கூர் vs இங்கிலாந்து The Oval 2021
31 பந்துகள் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் vs வங்கதேசம் Kanpur 2024
32 பந்துகள் – வீரேந்திர சேவாக் vs இங்கிலாந்து Chennai 2008
தொடர்ந்து தனது அதிரடியை ஜெய்ஸ்வால் காட்டவே இந்தியா 10.1 ஓவர்களில் சரித்திரம் படைத்தது. 10.1 ஓவர்களில் 103 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ரன்களை கடந்த முதல் அணியாக இந்த சாதனையை தற்போது இந்தியா படைத்துள்ளது.
இதற்கு முன்னதாகவும் இந்தியா 12.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்திருந்தது. 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 100 ரன்களை கடந்து சாதனை படைத்திருந்தது. இந்த சாதனையை தற்போது இந்தியாவே முறியடித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ரன்களை கடந்த இந்தியா:
10.1 ஓவர்கள் - இந்தியா vs வங்கதேசம், கான்பூர் 2024
12.2 ஓவர்கள் – இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், போர்ட் ஆஃப் ஸ்பெயின் 2023
13.1 ஓவர்கள் - இலங்கை vs வங்கதேசம், கொழும்பு 2001
13.4 ஓவர்கள் – வங்கதேசம் vs வெஸ்ட் இண்டீஸ், மிர்பூர் 2012
13.4 ஓவர்கள் – இங்கிலாந்து vs பாகிஸ்தான், கராச்சி 2022
13.4 ஓவர்கள் – இங்கிலாந்து vs பாகிஸ்தான், ராவல்பிண்டி 2022
13.6 ஓவர்கள் - ஆஸ்திரேலியா vs இந்தியா, பெர்த், 2012
கடைசியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 72 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று சுப்மன் கில் 36 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது வரையில் இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. ரிஷப் பண்ட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.