
ஈடன் கார்டன் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 42ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணியில் சுனில் நரைன் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 138 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 32 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நரைனைத் தொடர்ந்து பிலிப் சால்ட்டும் 37 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர் விளாசி 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 39 ரன்னிலும், ஆண்ட்ரே ரஸல் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களில் வெளியேறினார். கடைசியில் வந்த ரிங்கு சிங் 5, ரமன்தீப் சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், ஹர்ஷல் படேல், சாம் கரண் மற்றும் ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் கேகேஆர் 2ஆவது முறையாக 250 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இதற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 272/7 ரன்கள் குவித்தது. மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 18 சிக்ஸர்கள் அடித்ததைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் கேகேஆர் 18 சிக்ஸர்கள் விளாசியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது இவ்வளவு பெரிய ஸ்கோரை எப்படி எட்டும் என்று ஒவ்வொருவரும் மனதில் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கு எதிர்மாறாக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளது.
பிராப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியை தொடங்கினர். பஞ்சாப் கிங்ஸ் 3.3 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது. இதில், பிராப்சிம்ரன் சிங் மட்டும் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள்:
14 – கேஎல் ராகுல் vs DC, மொஹாலி, 2018
17 – நிக்கோலஸ் பூரன் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், துபாய், 2020
18 – பிராப்சிம்ரன் சிங் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா, 2024
19 – டேவிட் மில்லர் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சார்ஜா, 2014
19 – கேஎல் ராகுல் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மொஹாலி, 2019
அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த பிராப்சிம்ரன் 20 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடித்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் கிங்ஸ் 6 ஓவர்களில் 93 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ரிலீ ரோஸோவ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு ஷஷாங்க் சிங் களமிறங்கினார். ஷஷாங்க் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாச கொல்கத்தா பவுலர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். முதல் 10 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் ஒரு விக்கெட் இழந்து 132 ரன்கள் குவித்தது.
இதற்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் குவித்தது. இதுவே பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதன் பிறகு 15 ஓவர்களில் 201 ரன்கள் குவித்தது. இதையடுத்து கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது.
16ஆவது ஓவரிலேயே 9 ரன்கள் எடுக்கப்பட்டது. இதில், ஜானி பேர்ஸ்டோவ் 45 பந்துகளில் சதம் விளாசினார். மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிவேகமாக சதம் விளாசியவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.
அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியல்:
38 – டேவிட் மில்லர் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மொஹாலி, 2013
45 – மாயங்க் அகர்வால் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சார்ஜா, 2020
45 – ஜானி பேர்ஸ்டோவ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா, 2024
49 – விருத்திமான் சகா vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு, 2014 final
அடுத்த ஓவரில் 17 ரன்கள் குவித்த பஞ்சாப் கிங்ஸ் 18 ஆவது ஓவரில், 3 சிக்ஸர் ஒரு பவுண்டரி உள்பட 25 ரன்கள் குவித்தது. கடைசி 12 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று பஞ்சாப் விளையாடியது.
ஆனால், அடுத்த 4 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் 18.4 ஓவர்களில் 262/2 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 8 பந்துகள் எஞ்சிய நிலையில் டி20 கிரிக்கெட்டில் 262 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.