WI vs IND: தோற்றாலும் சந்தோஷத்தில் பூரன்.. ஜெயித்தாலும் சோகத்தில் தவான்..! இதுதான் காரணம்

First Published Jul 23, 2022, 5:12 PM IST

முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியடைந்திருந்தாலும், அந்த அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் மகிழ்ச்சியாக உள்ளார். ஆனால் அதேவேளையில், வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் வருத்தத்தில் உள்ளார்.
 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஷிகர் தவான்(97), ஷுப்மன் கில்(64), ஷ்ரேயாஸ் ஐயர்(54) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 50 ஓவரில் 308 ரன்களை குவித்தது. நன்றாக பேட்டிங் ஆடிய தவான் 3 ரன்னில் சதத்தை தவறவிட்டு, ஒருநாள் கிரிக்கெட்டில் 18வது சதத்தை பதிவுசெய்யும் வாய்ப்பை இழந்தார்.
 

309 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, கைல் மேயர்ஸின் அதிரடி அரைசதம்(75), பிரண்டன் கிங்கின் அரைசதம்(56) மற்றும் ப்ரூக்ஸ்(46), அகீல் ஹுசைன் (32), ரொமாரியோ ஷெஃபெர்டு (39) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் 50 ஓவரில் 305 ரன்களை குவித்து வெறும் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் தோற்றிருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரன் மகிழ்ச்சியாக உள்ளார். ஆனால் ஜெயித்திருந்தாலும், இந்திய அணியின் கேப்டன் தவான் வருத்தத்தில் உள்ளார். அதற்கான காரணத்தை இருவரும் பேசியதிலிருந்து பார்ப்போம்.
 

போட்டிக்கு பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன்,  இது எங்களுக்கு வெற்றி மாதிரி தான். கசப்பான இனிப்பாக இருந்தது போட்டியின் முடிவு. 50 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடவேண்டும் என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த போட்டியில் 50 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடி, 300 ரன்களுக்கு மேல் குவித்தது சிறப்பானது. ஒருநாள் அணியை கட்டமைத்துவரும் நாங்கள், உலகின் மிகப்பெரிய அணியான இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி என்றார் பூரன்.

போட்டிக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான், ஒரு அணியாக இணைந்து சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது மகிழ்ச்சி. ஆனால் சதத்தை தவறவிட்டதுதான் வருத்தமாக உள்ளது என்றார் தவான்.
 

click me!