
Bengaluru Test, India vs New Zealand: 20 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் 106 ரன்கள் எடுத்த இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை பெங்களூரு டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிராக இதே போன்ற ஒரு சூழ்நிலையில் இந்திய அணி மீண்டும் வெற்றி பெறும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இந்த முறை வெற்றி கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை 5ஆவது நாளில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. வில் யங் (48*) மற்றும் ரச்சின் ரவீந்திரா (39*) நியூசிலாந்துக்கு வெற்றியை தேடித் தந்தனர்.
1988 க்குப் பிறகு முதல் முறையாக இந்திய மண்ணில் நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தாலும், எம்.சின்னசுவாமி மைதானத்தில் சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் ஆகியோரின் போராட்டம் மறக்கமுடியாததாக இருக்கும்.
நியூசிலாந்து வெற்றி:
சனிக்கிழமை பெங்களூரு டெஸ்ட் போட்டியின் 4ஆவது நாளில் நியூசிலாந்தின் 2ஆவது இன்னிங்ஸில் 4 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், வெளிச்சம் குறைவாக இருந்ததால் நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்தினர். ஞாயிற்றுக்கிழமை இன்று 2ஆவது பந்திலேயே நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் (0)-ஐ இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அவுட் செய்தார்.
அந்த நேரத்தில், 2004 இல் வாங்கடேவில் நடந்தது போல, இந்த முறை சின்னசுவாமியில் மறக்கமுடியாத வெற்றியை இந்திய அணி பெறும் என்று இந்திய அணி நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் டெவோன் கான்வே (17) மற்றும் வில் யங் ஆகியோர் தொடக்க அடியிலிருந்து மீண்டனர். இந்திய அணியின் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் மாறி மாறி பந்து வீசினர்.
நியூசிலாந்து வீரர்கள் ரன்கள் அடிப்பதற்கு தடுமாறினாலும் விக்கெட்டுகளை இழக்கவில்லை. நியூசிலாந்து 35 ரன்கள் எடுத்திருந்த போது கான்வேவை பும்ரா அவுட் செய்தார். ஆனால் அதன் பிறகு இந்திய பந்துவீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் வேகப்பந்து எடுபடாத நிலையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் பந்து வீச அழைக்கப்பட்டனர்.
ஆனால், அவர்கள் ஓவரில் ரன்கள் தான் எடுக்கப்பட்டதே தவிர விக்கெட் விழவில்லை. கடைசி வாய்ப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் பயன்படுத்தப்பட்டார். எனினும், பலன் அளிக்கவில்லை. கடைசியாக வில் யங் (48*) மற்றும் ரச்சின் ரவீந்திரா (39*) இருவரும் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர்.
இறுதியாக நியூசிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக நியூசிலாந்து சரித்திரம் படைத்துள்ளது. 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை ருசித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்திய மண்ணில் 37 டெஸ்ட் போட்டிகளில் 3ஆவது வெற்றியை பெற்றிருக்கிறது.
இந்திய மண்ணில் நியூசிலாந்து வெற்றிகள்:
1969 நாக்பூர் டெஸ்ட் – 167 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
1988 வான்கடே டேஸ்ட் – 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2024 பெங்களூரு டெஸ்ட் – 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருது:
பெங்களூருவில் தனது குடும்பத்தினர் முன்னிலையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார் ரச்சின். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த பிறகு, 2ஆவது இன்னிங்ஸில் அவுட்டாகாமல் அணியை வெற்றி பெறச் செய்து மைதானத்தை விட்டு வெளியேறினார் நியூசிலாந்தின் இந்திய வம்சாவளி ஆல்-ரவுண்டர். ரச்சினின் அற்புதமான பேட்டிங்கால் நியூசிலாந்தின் வெற்றிக்கு வழி பிறந்தது.
இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 24 ஆம் தேதி புனேயில் நடைபெறுகிறது. 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.