
ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ், தனது முன்னாள் அதிரடி வீரரும், பேட்டிங் பயிற்சியாளருமான கீரன் பொல்லார்டை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான அவரது 16 ஆண்டுகாலப் பயணம் புதிய அத்தியாயத்தை எட்டியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான கீரன் பொல்லார்ட், தனது 22 வயதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். அன்றிலிருந்து அந்த அணியின் வெற்றிப் பயணத்தில் முக்கியப் பங்காற்றி வந்துள்ளார்.
தனது அதிரடியான பேட்டிங், ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன், நெருக்கடியான சூழல்களில் சிறப்பாகச் செயல்படும் ஆற்றல் ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் பொல்லார்ட்.
வீரராக மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பல மறக்க முடியாத வெற்றிகளைத் தேடித்தந்த அவர், பின்னர் பேட்டிங் பயிற்சியாளராகவும் தனது அனுபவத்தை அணியுடன் பகிர்ந்துகொண்டார். தற்போது தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டிருப்பது அவரது நீண்டகாலத் தொடர்பில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
கீரன் பொல்லார்டின் நியமனம் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் இணை உரிமையாளரான நீதா எம். அம்பானி கூறுகையில்:
“பொல்லார்ட் தனது 22 வயதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். கடந்த 16 ஆண்டுகளாக அவர் எங்கள் குடும்பத்தின் ஓர் அங்கமாக இருந்து வருகிறார். வீரராக அவர் பல மறக்க முடியாத தருணங்களை எங்களுக்குப் பரிசளித்தார். பயிற்சியாளராகவும் தனது அனுபவம், ஆர்வம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆழமான புரிதலைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
தற்போது அவர் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் சீருடையை அணிவதன் அர்த்தமும், அணிக்காக விளையாடும்போது என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் பொல்லார்டுக்கு நன்றாகத் தெரியும். இந்தப் புதிய பொறுப்பிலும் அதே அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் உறுதியுடன் அவர் செயல்படுவார் என்று நம்புகிறேன். அணியின் அடுத்தகட்டப் பயணத்தை அவர் வழிநடத்த எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடுகள், அணியின் கலாசாரம் மற்றும் உயர்மட்டப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சவால்கள் குறித்து பொல்லார்டுக்கு ஆழமான புரிதல் உள்ளது.
டி20 கிரிக்கெட் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் அதன் ஓர் அங்கமாக இருந்த அவர், விளையாட்டின் மாறிவரும் தன்மை, போட்டிக்கான உத்திகள் மற்றும் அதிகரித்து வரும் போட்டி ஆகியவற்றில் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வீரராகவும், சமீபத்திய ஆண்டுகளில் பேட்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றிய அனுபவம், அணியின் வெற்றிக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவுகிறது. இந்த அனுபவம், அணியை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்வதற்கான வலுவான அடித்தளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து கீரன் பொல்லார்ட் கூறுகையில்:
“மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்வது எனக்குப் பெருமையாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் என் வாழ்க்கையிலும் கிரிக்கெட் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த அணியுடனும், வீரர்களுடனும், ரசிகர்களுடனும் எனக்குள்ள பந்தம் மிகவும் மதிப்புமிக்கது.
வீரராகவும் பின்னர் பயிற்சியாளராகவும் இந்தப் பயணத்தை அனுபவித்துள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அணி எதைக் குறிக்கிறது என்பதையும், அணியின் நீல-தங்க நிறச் சீருடையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் உள்ள பொறுப்பையும் நான் நன்கு அறிவேன்.
என் மீது நம்பிக்கை வைத்த நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வீரர்கள் மற்றும் பயிற்சிக் குழுவினருடன் இணைந்து பணியாற்றவும், அணியின் பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தவும், இளம் திறமைகளை வளர்க்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் ரசிகர்கள் மேலும் பல வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் செயல்படுவோம்” என்றார்.
பொல்லார்டை தலைமைப் பயிற்சியாளராக நியமித்திருப்பதன் மூலம், அணியின் வெற்றிப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதிலும், புதிய வீரர்களின் திறமைகளை வளர்ப்பதிலும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது.
அணியின் வெற்றிகரமான காலகட்டங்களில் ஓர் அங்கமாக இருந்த பொல்லார்ட், தனது அனுபவத்தின் அடிப்படையில் வீரர்களை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அணியின் ஒற்றுமை, செயல்திறன் மற்றும் களத்துக்கு வெளியேயும் உள்ளேயும் சிறப்பாகச் செயல்படும் திறனை மேம்படுத்துவதும் அவரது பொறுப்புகளில் முக்கியமானதாக இருக்கும்.