ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி பரிசளிப்பு விழாவின்போது, இந்திய வீரர்கள் தம்மிடம் கோப்பையை ஏற்க மறுத்ததால், மோஷின் நக்வி கோப்பையுடன் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) பொதுக்குழு கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் (BCCI) அவர் மன்னிப்புக் கேட்டதாக வெளியான செய்திகளை நக்வி கடுமையாக மறுத்துள்ளார்.
சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் எழுதியுள்ள பதிவில், "ஏசிசி தலைவராக, அன்றைய தினமே கோப்பையை வழங்க நான் தயாராக இருந்தேன். இப்போதும் நான் தயாராகவே இருக்கிறேன். இந்திய அணிக்கு அது உண்மையிலேயே தேவை என்றால், ஏசிசி அலுவலகத்திற்கு வந்து என்னிடம் இருந்து அதைப் பெற்றுக் கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "நான் எவ்வித தவறும் செய்யவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்துகிறேன். நான் பிசிசிஐயிடம் ஒருபோதும் மன்னிப்புக் கேட்கவில்லை, எதிர்காலத்திலும் அவ்வாறு செய்ய மாட்டேன்" என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.