Mohammed Siraj Opens Up About Defeating England In 5th Test
இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மேலும் இந்த தொடரையும் சமன் செய்து வரலாற்று சாதனை படைத்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. 2வது இன்னிங்சில் இந்திய அணி 396 ரன்கள் குவித்தது. இதனால் 374 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.
24
இந்திய அணி த்ரில் வெற்றி
இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 300/3 என்ற நல்ல நிலையில் இருந்தது. அதிரடி சதம் விளாசிய ஹாரி ப்ரூக் (98 பந்தில் 111 ரன்), ஜோ ரூட் (105 ரன்) ஆட்டமிழந்த பிறகு ஆட்டம் அப்படியே இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கொண்டு 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இன்று களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிராஜின் பந்துவீச்சில் தடம்புரண்டனர். அந்த அணி வீரர்கள் ஜேமி ஸ்மித், ஓவர்டன், ஜேமி ஸ்மித் அடுத்தடுத்து அவுட்டாக இறுதியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர்.
34
முகமது சிராஜ் என்னும் போராளி
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் பாஸ்ட் பவுலர் 'டிஎஸ்பி' முகமது சிராஜ் தான். 30 ஓவரில் 104 ரன்கள் கொடுத்த அவர் 5 விக்கெட் வீழ்த்தி மேட்ச் வின்னராக ஜொலித்தார். அதுமட்டுமின்றி இந்த தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக சாதனை படைத்துள்ளார். 5வது டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற சிராஜ், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை முடக்கியது எப்படி? 'சீக்ரெட்' பிளான் என்ன? என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
எனது பிளான் இதுதான்
அதாவது ஆட்டத்துக்கு பிறகு பேசிய சிராஜ், ''முதல் நாள் முதல் இன்று (கடைசி நாள்) வரை நாங்கள் கடுமையாகப் போராடியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. விக்கெட் எடுத்தாலும் சரி, ரன்கள் போனாலும் சரி என்னுடைய ஒரே திட்டம் சரியான லைனில் பந்து வீசுவதுதான். ஸ்டெம்ப் லைனில் தொடர்ந்து பந்துவீசி அழுத்தத்தை உருவாக்குவதே எனது திட்டம். அங்கிருந்து எல்லாம் ஒரு போனஸாக அமைந்தது. ஹாரி ப்ரூக் டி20 போன்று ஆடியபோது நாங்கள் ஆட்டத்தில் பின்தங்கியிருந்தோம். ஆனால் கடவுளுக்கு நன்றி. எந்தப் புள்ளியிலிருந்தும் ஆட்டத்தை வெல்ல முடியும் என்று நான் எப்போதும் நம்புகிறேன், காலை வரை அதைச் செய்தேன்.
இன்று நான் விழித்தபோது, என்னால் அதைச் செய்ய முடியும் என்று நினைத்தேன். கூகிளிலிருந்து 'நம்பு' என்று ஒரு படத்தைப் பதிவிறக்கம் செய்தேன். ப்ரூக் கேட்ச்சை நான் தவற விட்டது ஆட்டத்தை மாற்றும் தருணம் என்று நினைத்தேன். அவர் கொடுத்த கேட்ச்சை நான் பிடித்திருந்தால் இன்று நாங்கள் ஆட வேண்டிய நிலை இருந்திருக்காது. அதனால். மனம் உடைந்து போனேன். ஆனால் ஜட்டு பாய் (ஜடேஜா) என்னிடம், 'உன் திறமையை நம்பு, உன் அப்பாவை நினைத்து அவருக்காக இதை செய்" என்று சொன்னார்.