
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் நட்சத்திரங்களாக ஜொலித்தவர்கள். இருவரும் இணைந்து இந்தியாவிற்கு ஏராளமான வெற்றிகளை பெற்று தந்தனர். தற்போது அவர்களின் பொற்காலம் முடிந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவிற்கு முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவ், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து கவலை அடைந்துள்ளார். இருவருமே கிரிக்கெட் வாழ்க்கையில் பொற்காலத்தை கடந்தவர்கள். ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.
தனது 35 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கபில் தேவ், கிரிக்கெட் வீரர்கள் 34 வயதைக் கடந்த உடன் அவர்களது எதிர்காலம் உடல் (ஃபிட்னஸ்) எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்தது என்றார்.
இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இணைந்து சமீபத்தில் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்காக முறையே 35 மற்றும் 36 வயதில் வென்றனர். அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் விளையாட இருக்கின்றனர்.
இனிவரும் ஒவ்வொரு தொடர்களிலும் இந்த நட்சத்திர வீரர்கள் மீது தான் ஒவ்வொருவரது பார்வையும் விழும். தற்போது 37 வயதாகும் ரோகித் சர்மா சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அவரது கேப்டன்ஸியும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
இதே போன்று தான் விராட் கோலியும், இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரது உடல் தகுதி குறித்து எந்த சந்தேகமும் தேவையில்லை. பேட்டிங்கில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் கோலி கிங் என்று நிரூபித்து வருகிறார். உலக கிரிக்கெட்டில் திறமையான வீரர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார்.
விராட் கோலி – ரோகித் சர்மாவின் உடல் தகுதி:
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் உடல் தகுதியைப் பொறுத்து தான் அடுத்த சில நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் இந்திய அணியின் பயணம் இருக்கும். எனினும், இவர்களது பேட்டிங் சில நேரங்களில் கவலை அளிக்கிறது. ஒரு சில போட்டிகளைத் தவிர மற்ற எல்லா போட்டிகளிலும் சொதப்பி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கோலி சிறப்பான இன்னிங்ஸ் விளையாடவில்லை. ஆனால் அவரது சில இன்னிங்ஸ்கள் அணியின் வெற்றிக்கு உதவியது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் காலம் வரும். அந்த இடைவெளியை நிரப்புவது இந்திய அணிக்கு எளிதானல்ல. இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் தனது பொற்காலத்தை பற்றி பேசுகிறார். உடல் தகுதியுடன் இணைக்கப்பட்ட அவரது கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
கபில்தேவ்:
ஒரு ஊடக சேனலிடம் பேசிய கபில்தேவ், "என்னுடைய கருத்துப்படி, உங்களின் முதன்மை வயது 26 முதல் 34 வயதுக்குள் இருக்கும். அதன்பிறகு, வீரர்களின் உடற்தகுதி மட்டுமே அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை உறுதி செய்யும். ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, கோலி மற்றும் ரோகித் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.
இப்போது இந்தியாவின் கவனம் முழுவதும் வரும் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மீது விழுகிறது. அது வரையிலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் முழு உடல் தகுதியுடன் இருந்தால் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடுவார்கள். ஆனால், அதற்கு முன்னதாக 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வெல்வதை இலக்காக நிர்ணயித்துள்ளனர்.
ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்திய கபில்தேவ்:
சச்சின் டெண்டுல்கர் தனது 40 வயது வரையில் கிரிக்கெட் விளையாடினார். ஆனால், எம்.எஸ்.தோனி 39 வயது வரையிலும் கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்தார். இவர்களது வரிசையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருமே டி20 ஃபார்மேட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இதையடுத்து, இருவரும் எவ்வளவு காலம் இணைந்து விளையாடுவார்கள் என்று பார்க்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரவி சாஸ்திரி இளம் வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், சச்சின் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடி ஓய்வு பெற்றார். இதிலிருந்து நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும்.
டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு பிரியாவிடை:
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இந்திய அணிக்கு 3 வடிவங்களிலும் சிறப்பான வெற்றிகளை அளித்துள்ளனர். அவர்களது தொழில் வாழ்க்கையும் நன்றாக சென்றது. இருப்பினும், டி20 உலகக் கோப்பை 2024 கோப்பையை வென்று இந்தியாவின் சாம்பியனான பிறகு, இருவரும் டி20 கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றனர்.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 வடிவத்திற்கு விடைபெறும் நேரத்தில், இந்த வடிவத்தில் அதிக ரன்கள் எடுத்த முதல் இரண்டு வீரர்களாக அவர்கள் தொடர்வது குறிப்பிடத்தக்கது. டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விராட் மற்றும் ரோகித் தற்போது இந்தியாவுக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இன்னும் ஓரிரு ஆண்டுகள் இருவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.