இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி, மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இந்திய அணியின் பேட்டிங் முடிந்த பிறகு மழை வலுத்ததால், ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது.
ஷ்ரேயாஸ் ஐயர் சூப்பர் பேட்டிங்
கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (47 பந்துகளில் 68 ரன்), அபிஷேக் ஷர்மா (24 பந்துகளில் 59) ரன் மற்றும் ஷிவம் துபே (21 பந்துகளில் 42) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா நல்ல ஸ்கோரை எட்டியது. இங்கிலாந்து தரப்பில் சாகிப் மஹ்மூத் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியாவுக்கு தொடக்கம் மிகவும் மோசமாக இருந்தது.
வெறும் 6 ரன்களுக்குள் சஞ்சு சாம்சன் (1), இஷான் கிஷன் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. அயர்லாந்து தொடரில் சொதப்பிய சஞ்சு, இங்கிலாந்திலும் அதே ஃபார்மை தொடர்ந்தார். தொடக்கம் முதலே தடுமாறிய அவர், தான் சந்தித்த ஏழாவது பந்தில் சாகிப் மஹ்மூத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் இஷான் கிஷன் ரன் அவுட் ஆனார்.