IND vs AUS 4th Test
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க ஆயத்தமாக உள்ளனர். இந்த டெஸ்ட் போட்டி பாக்சிங் டே போட்டியாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) டிசம்பர் 26ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
MCG Boxing Day Test 2024
பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியை இந்தியா வெற்றியுடன் தொடங்கியது. பெர்த்தில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் அடிலெய்டில் நடந்த பகல்-இரவு டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமாகத் தோல்வியடைந்தது. பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. மழை அடிக்கடி குறுக்கிட்டு இந்தியா தோல்வியைத் தவிர்க்க உதவியது.
IND vs AUS Boxing Day Test
இந்நிலையில், மெல்போர்னில் நடக்கவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இரு அணிகளும் இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற துடிப்புடன் களமிறங்கும். இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.
MCG curator Matt Page
இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா பாக்சிங் டே டெஸ்டில் பிட்ச் எவ்வாறு செயல்படும் என்பதை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் கியூரேட்டர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
Matt Page on MCG pitch
ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு பேட்டி அளித்த கியூரேட்டர் மேட் பேஜ், "கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் செய்த சேவையில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். இந்த முறை அதை மாற்றுவதற்கான எந்தத் அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தொடரில் இதுவரை மூன்று சிறந்த ஆடுகளங்களில் மூன்று அருமையான டெஸ்ட் போட்டிகளைப் பார்த்துவிட்டோம். எனவே எங்களைப் பொறுத்தவரை, இந்த முறையும் பிட்ச் வழக்கம்போலவே இருக்கும் எனக் நினைக்கிறோம். அது ஒரு பரபரப்பான போட்டியை உருவாக்கும்" என்றார்.
IND vs AUS Test Series 2024
"ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் மிகவும் தட்டையான ஆடுகளத்தைத் தயாரித்திருந்தோம். பிறகு நாங்கள் டெஸ்ட் போட்டிகளை மேலும் சுவாரஸ்யமானதாக ஆக்கும் வகையில் ஆடுகளம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். எனவே இப்போது ஆடுகளங்களில் அதிக புற்களை விட்டுவிடுகிறோம். அது பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்புகளைக் கொடுக்கும். ஆனால், புதிய பந்து மென்மையடைந்தவுடன் பேட்டிங் செய்ய ஏற்றதாக இருக்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Virat Kohli in Border Gavaskar Trophy 2024
சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த பேஜ், "கடந்த 4-5 ஆண்டுகளாக நடைபெற்ற போட்டிகளைத் திரும்பிப் பார்த்தால், இங்கு நடைபெற்ற போட்டிகளில் களம் வேகப் பந்துவீச்சுக்கே அதிக சாதகமாக இருந்திருப்பது தெரியும். சுழற்பந்துவீச்சுக்கு அதிக வாய்ப்பு இருக்காது. இந்த முறையும் அதில் மாற்றம் ஏதும் இருக்காது என்றுதான் நாங்கள் கருதுகிறோம்" எனக் கூறினார்.
IND vs AUS Boxing Day Test Pitch Report
"மெல்போர்னில் வானிலை நிலவரம் விரைவாக மாறக்கூடும் என்பது எங்களுக்குத் தெரியும். பாக்ஸிங் டே ஆட்டத்தின்போது 40 டிகிரி அளவுக்கு வெயில் இருக்குமா என்றால், அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஈரப்பதம் சற்று அதிகமாக இருக்கும் வகையில் ஆடுகளத்தைக் கண்காணித்து அதற்கேற்ப சரிசெய்வோம்" என்றார்.