
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1 ஆம் தேதியும், 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 9ஆம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 17 ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்படவில்லை. எனினும், ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் களமிறங்குவார் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இப்போதைய சூழலில் அவர் பங்கேற்பது என்பது சந்தேகமாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விக்டோரியா அணிக்காக விளையாடினார். அப்போது எதிரணியின் வீரர் அடித்த பந்தை மேக்ஸ்வெல் ஃபீல்டிங் செய்த போது பந்து அவரது கையில் பலத்தை காயத்தை ஏற்படுத்தியது.
இதனால், வலி தாங்க முடியாமல் துடித்தார். இதைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது அவரது, மணிக்கட்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதுஇதைத் தொடர்ந்து விக்டோரியா அணியின் 2ஆவது இன்னிங்ஸில் மேக்ஸ்வெல் பேட் செய்ய வரவேயில்லை.
கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடினார். கடந்த நவம்பர் 4 ஆம் தேதி சர்வதேச அளவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடினார். அதன் பிறகு எந்தப் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை.
தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மேக்ஸ்வெல் இதுவரையில் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 339 ரன்கள் எடுத்துள்ளார். 127 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள மேக்ஸ்வெல் 2 சதம், 23 அரை சதம் உள்பட 3482 ரன்கள் எடுத்துள்ளார்.
இதே போன்று 98 டி20 போட்டிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் 3 சதங்கள், 10 அரைசதங்கள் உள்பட 2159 ரன்கள் குவித்துள்ளார். மேலும், பந்து வீச்சில் டெஸ்ட் போட்டிகளில் 8 விக்கெட்டுகளையும், ஒரு நாள் போட்டிகளில் 60 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 39 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.