ஆஸ்திரேலியா தொடருக்கு ஹர்சித் ராணா தேர்வு செய்யப்பட்டதை அஸ்வினும், ஸ்ரீகாந்தும் விமர்சித்து இருந்தனர். இவர்கள் இருவருக்கும் இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிளுக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டது குறித்து எழுந்த கடுமையான விமர்சனங்களுக்கு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த வாரம் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆஸ்திரேலியாவுக்கான வெள்ளைப்பந்து தொடருக்கான அணியை அறிவித்த பிறகு, ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் ஹர்ஷித் இடம்பெற்றது குறித்து ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கேள்வி எழுப்பினர்.
25
ஹர்சித் தேர்வை விமர்சித்த அஸ்வின், ஸ்ரீகாந்த்
முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஹர்சித் ராணாவின் தேர்வை கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமிக்குப் பதிலாக ஹர்ஷித் எப்படி அணியில் சேர்க்கப்பட்டார்? என இருவரும் கம்பீர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தனர். இந்நிலையில், ஹர்சித் ராணா தேர்வை விமர்சித்த ஸ்ரீகாந்த் மற்றும் அஸ்வினை கெளதம் கம்பீர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
35
வெட்கக்கேடானது
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கம்பீர், ''23 வயது இளைஞரை தனிப்பட்ட முறையில் குறிவைப்பது சற்று வெட்கக்கேடானது. ஹர்ஷித்தின் தந்தை முன்னாள் சேர்மன் அல்ல. ஒரு தனிநபரை குறிவைப்பது நியாயமில்லை. நீங்கள் ஒருவரின் செயல்திறனை விமர்சிக்கலாம். அதைச் செய்ய தேர்வாளர்களும் பயிற்சியாளர்களும் உள்ளனர்.
ஆனால் 23 வயது சிறுவனிடம் இப்படிப்பட்ட விஷயங்களைச் சொன்னால், சமூக ஊடகங்கள் அதை மேலும் பெரிதாக்குகின்றன. சமூக ஊடகங்களில் பல விஷயங்கள் சொல்லப்படும்போது, அவனது மனநிலையை கற்பனை செய்து பாருங்கள்'' என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய கம்பீர், ''உங்கள் யூடியூப் சேனலை நடத்துவதற்காகவே நீங்கள் பேசுகிறீர்கள். நான் மட்டுமல்ல, நீங்கள், நாம் அனைவரும் இந்திய கிரிக்கெட்டின் மீது தார்மீகப் பொறுப்பைக் கொண்டுள்ளோம். இந்திய கிரிக்கெட் எனக்குச் சொந்தமானது அல்ல. அது டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருப்பவர்களுக்குச் சொந்தமானது அல்ல.
உங்கள் அனைவருக்கும் சொந்தமானது. இந்திய கிரிக்கெட் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பும் ஒவ்வொரு இந்தியருக்கும் அது சொந்தமானது. எனவே நீங்கள் விமர்சிக்கலாம், ஆனால் அதை செயல்திறன் அடிப்படையில் செய்யுங்கள். ஒரு தனிநபரை குறிவைப்பதற்காக செய்யாதீர்கள்'' என்று தெரிவித்தார்.
55
கம்பீர் பயிற்சியின் கீழ் ஹர்சித் அறிமுகம்
கம்பீர் பயிற்சியின் கீழ் ஹர்ஷித் ராணா இந்திய அணிக்கு அறிமுகமாகி அனைத்து வடிவங்களிலும் 10 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில், ஹர்ஷித் ஐந்து போட்டிகளில் 20.70 சராசரியுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.