The Gabba Stadium
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானம் 1931 முதல் 67 ஆண்கள் டெஸ்ட் போட்டிகளையும் இரண்டு பெண்கள் டெஸ்ட் போட்டிகளையும் நடத்தியுள்ளது. இங்கு நடைபெறும் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இதனால், காபா மைதானம் ஆஸ்திரேலியாவின் கோட்டை என்று அழைக்கப்பட்டது. 1988 முதல் 2021 வரை இந்த மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஒருமுறைகூட தோற்கவில்லை .
அந்தக் காலத்தில் கோடை காலத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடர்களில் முதல் போட்டி பெரும்பாலும் இந்த மைதானத்தில்தான் நடக்கும். வரலாற்று சிறப்புமிக்க இந்த மைதானம் இந்த ஆண்டு இறுதியில் இரண்டாவது ஆஷஸ் டெஸ்டை நடத்தும். ஆனால், குயின்ஸ்லாந்து அரசாங்கத்தின் அறிவிப்பை அடுத்து, எதிர்காலத்தில் இந்த மைதானத்தில் தொடர்ந்து போட்டிகளை நடத்துவதா வேண்டாமா என கிரிக்கெட் ஆஸ்திரேலியா மறுபரிசீலனை செய்கிறது.
பிரிஸ்பேனில் உள்ள விக்டோரியா பார்க்கில் 63000 பேர் அமரக்கூடிய புதிய மைதானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில்தான் 2032 ஒலிம்பிக்கின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது. காபா மைதானம் இடிக்கப்பட்ட பிறகு கிரிக்கெட் போட்டிகளும் அந்த மைதானத்தில் நடைபெறும். 2032இல் காபா மைதானத்தில் ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியின் தங்கப் பதக்கப் போட்டி நடைபெறவும் வாய்ப்புள்ளது.
"காபா பல ஆண்டுகளாக கிரிக்கெட்டுக்கு ஒரு அற்புதமான இடமாக இருந்து வருகிறது, மேலும் ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு எண்ணற்ற நினைவுகளை வழங்கியுள்ளது - இருந்தாலும் மைதானத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் அனைவருக்கும் உள்ளன, நாம் எதிர்காலத்தை நோக்கி முடிவெடுக்க வேண்டும்" என்று குயின்ஸ்லாந்து கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி டெர்ரி ஸ்வென்சன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"ஐ.சி.சி போட்டிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆஷஸ் தொடர், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர் போன்ற உலகின் சிறந்த கிரிக்கெட் போட்டிகளை நடந்ததும் வாய்ப்பு குயின்ஸ்லாந்துக்குக் கிடைக்கும். புதிதாகக் கட்டப்பட்ட மைதானத்தில் பிபிஎல் மற்றும் டபிள்யூபிபிஎல் தொடர் போட்டிகளும் நடத்தப்படும்" என டெர்ரி ஸ்வென்சன் தெரிவித்துள்ளார்.