
Faf du Plessis, IPL 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் போன்று எஸ் ஏ20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி டிராபியை கைப்பற்றிய நிலையில், அந்த அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸை அதிகபட்சமாக ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுத்து அவரை ஐபிஎல் தொடரில் தங்களது அணிக்காக கேப்டனாக நியமித்தார் அணியின் துணை உரிமையாளர் காவ்யா மாறன்.
ஒவ்வொரு சீசனிலும் கடைசி வரை போராடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது கடைசியில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறும். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது டிராபியை கைப்பற்றியது.
இதே போன்று தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரில் காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 2 முறை டிராபியை தட்டி தூக்கியது.
2023 ஆம் ஆண்டு அந்த அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக இருந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு பேட் கம்மின்ஸ் கேப்டனாக இருந்து டிராபி வென்று கொடுத்தார். இதையடுத்து ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு பல சாதனைகளை படைத்தார். மேலும், அதிரடியாக விளையாடிய ஹைதராபாத் 3 போட்டிகளில் 260 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்தது. அதிகபட்சமாக 287/3 ரன்கள் குவித்தது.
இதே போன்று தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அந்த அணியின் துணை உரிமையாளரான ப்ரீத்தி செய்ய இருக்கிறார். இதுவரையில் ஒருமுறை கூட டிராபி கைப்பற்றாத பஞ்சாப் கிங்ஸ் அணியானது 18ஆவது முறையாக ஐபிஎல் 2025 தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் திறமை வாய்ந்த வீரர்களை ஏலம் எடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்.
அதோடு கரீபியன் பிரீமியர் லீக் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸீல் 2024 ஆம் ஆண்டுக்கான 12 ஆவது சீசன் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கி இன்று வரையில் நடைபெற்றது. இந்த தொடரில் ப்ரீத்தி ஜிந்தாவின் செயின் லூசியா கிங்ஸ் அனியும் இடம் பெற்று விளையாடியது. இந்த அணிக்கு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி கேப்டனாக செயல்பட்டு வரும் ஃபாப் டூ ப்ளெசிஸ் கேப்டனாக இடம் பெற்றார்.
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் 12ஆவது சீசனில் செயிண்ட் லூசியா கிங்ஸ் விளையாடிய 10 லீக் போட்டிகளில் 7ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்து முதல் தகுதி சுற்று போட்டிக்கு சென்றது. அதிலேயும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. இதில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 11 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக செயிண்ட் லூசியா கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருந்தவர் ஆர்சிபி கேப்டனான ஃபாப் டூ ப்ளெசிஸ்.
ஏற்கனவே ஆர்சிபி ஐபிஎல் 2025க்கு முன்னதாக கேப்டன் ஃபாப் டூ ப்ளெசிஸை அணியிலிருந்து விடுவிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணை உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஃபாப் டூப்ளெசிஸ்ஸை பஞ்சாப் அணிக்காக விளையாட வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக டிராபி வென்று கொடுத்த ஃபாப் டூப்ளெசிஸ் கண்டிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் டிராபி வென்று கொடுப்பார் என்று நம்புவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட வைக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது ப்ரீத்தி ஜிந்தாவின் கவனம் முழுவதும் டிராபி வென்று கொடுத்த ஃபாப் டூப்ளெசிஸ் பக்கம் திரும்பியிருக்கிறது.
எனினும், ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்படும் வீரர்களின் முழு பட்டியல் இந்த மாத இறுதிக்குள்ளாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருப்பது ரோகித் சர்மா யாருக்காக விளையாட போகிறார் என்பது தான். தற்போது ஃபாப் டூப்ளெசிஸ்ஸூம் தலைப்புச் செய்தியாக வந்துவிட்டார். அவர் ஆர்சிபியிலிருந்து விடுவிக்கப்பட்டால் பஞ்சாப் கிங்ஸ் சார்பில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் ஃபாப் டூ ப்ளெசிஸ் இதுவரையில் 145 போட்டிகளில் விளையாடி 37 அரைசதங்கள் உள்பட 4571 ரன்கள் எடுத்துள்ளார்.