
எம்.எஸ்.தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒன்றாக இணைந்து விளையாடினர். ஆனால் அவர்கள் ஐபிஎல் தொடர்களில் ஒருநாள் கூட டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது இல்லை.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானார். தற்போது வரையில் சிஎஸ்கே அணிக்காக மஞ்சள் நிற ஜெர்சியில் விளையாடி வருகிறார்.
தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வி இன்னமும் எழுந்து வருகிறது. வயது மற்றும் காயங்கள் காரணமாக தோனி 7ஆவது அல்லது 8ஆவது வரிசையில் களமிறங்கி விளையாடுகிறார். ஐபிஎல் 2025 அல்லது ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு தொடர்களில் தோனி தனது ஓய்வு முடிவு குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் 17 ஆண்டுகளாக விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இத்தனை ஆண்டுகளாக டிராபியை கைப்பற்றாத அணிகளின் பட்டியலில் ஆர்சிபி முதலிடத்தில் இருக்கிறது. இந்த முறை எப்படியும் டிராபியை கைப்பற்ற ஆர்சிபி பலம் வாய்ந்த வீரர்களை களத்தில் இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் தனது ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கினார். 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் 3 சீசன்கள் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். 2011 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார்
கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியானது ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன் பொறுப்பு கொடுத்தது. தோனி, கோலி மற்றும் ரோகித் ஆகியோர் ஒன்றாக விளையாடுவதை ரசிகர்கள் கனவு காண்கிறார்கள்.
இது சர்வதேச கிரிக்கெட்டில் நடக்காவிட்டாலும், ஐபிஎல் தொடர்களில் இருவேறு ஜாம்பவான்கள் ஒன்றாக சந்தித்துக் கொள்ளலாம். அதன்படி ஐபிஎல் வரலாற்றில் சிறந்த வீரர்களின் கனவு அணி என்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
ஓபனிங் ஜோடி:
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தான் ஐபிஎல் கனவு அணியின் சிறந்த ஓபனிங் ஜோடி. ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலி தான் அதிக ரன்கள் குவித்துள்ளார். இதுவரையில் 252 போட்டிகள் விளையாடி 8 சதங்கள், 55 அரைசதங்கள் உள்பட 8004 ரன்கள் குவித்துள்ளார்.
ஆனால், ரோகித் சர்மா கோலியைப் போன்று அதிக ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் அவர் 257 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள்,43 அரைசதங்கள் உள்பட 6628 ரன்கள் குவித்துள்ளார். டி20 போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். அதிரடிக்கு பெயர் போனவர். ஹிட்மேன் என்றும் அழைக்கப்படுகிறார்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்:
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த நம்பர் 3 பேட்ஸ்மேன்களில் ஒருவராக சுரேஷ் ரெய்னா இருக்கிறார். கனவு அணியில் சிறந்த நம்பர் 3 பேட்ஸ்மேனாக இணைந்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 205 போட்டிகளில் விளையாடி 5528 ரன்கள் எடுத்துள்ளார்.
ஏபி டிவிலியர்ஸ் – சூர்யகுமார் யாதவ்:
ஐபிஎல் கனவு அணியில் ஏபி டிவிலியர்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இடம் பெற்றுள்ளனர். இருவரும் சிறந்த பினிஷராகவும், சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் திகழ்கின்றனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் டிவிலியர்ஸ் 5162 ரன்கள் குவித்துள்ளார். இதே போன்று சூர்யகுமார் யாதவ் 124 போட்டிகளில் விளையாடி 3250 ரன்கள் எடுத்துள்ளார். 2018 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்:
ஐபிஎல் கனவு அணிக்கு எம்.எஸ்.தோனி கேப்டனாக இருப்பார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, 2021 மற்றும் 2023ல் சிஎஸ்கே அணிக்கு 2 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் 2024க்கு முன்பாக சிஎஸ்கேயின் கேப்டன் பொறுப்பு ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வழங்கப்பட்டது.
ஆல் ரவுண்டர்ஸ்:
டுவைன் பிராவோ மற்றும் சுனில் நரைன் இருவரும் ஆல் ரவுண்டர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். பிராவோ 3ஆவது வேகப்பந்து வீச்சாளராகவும், நரைன் 4ஆவது ஸ்பின்னர்களாகவும் இருப்பார்கள். சிஎஸ்கேயின் ஒரு அங்கமாக பிராவோ இருந்தார். நரைன் கேகேஆர் அணிக்காக விளையாடியுள்ளார். மேலும், பேட்ஸ்மேனாகவும் பக்க பலமாக இருக்கிறார். ஐபிஎல் 2024ல் 15 போட்டிகளில் விளையாடி 488 ரன்கள் குவித்தார். 2024 ஐபிஎல் தொடரில் கேகேஆர் டிராபி வென்றது.
பவுலர்கள்:
லசித் மலிங்கா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் ஐபிஎல் கனவு அணியில் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் மலிங்கா முக்கிய பங்கு வகித்துள்ளார். 122 போட்டிகளில் மலிங்கா 170 விக்கெட்டுகள் எடுத்தார். பும்ரா 133 போட்டிகளில் 165 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யுஸ்வேந்திர சாஹல்
இவர்களது வரிசையில் ஸ்பின் பவுலரான யுஸ்வேந்திர சாஹலும் இணைந்துள்ளார். லெக் ஸ்பின்னரான சாஹல் 160 போட்டிகளில் 205 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் மூலமாக ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கிய சாஹல், 2014 முதல் 2021 வரையில் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். அதன் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
சிறந்த வீரர்களின் ஐபிஎல் கனவு அணி:
எம்.எஸ்.தோனி (கேப்டன்), விராட் கோலி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஏபி டிவிலியர்ஸ், சூர்யகுமார் யாதவ், டுவைன் பிராவோ, சுனில் நரைன், லசித் மலிங்கா, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா.