
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா முடிந்தது தான் தாமசம், ரசிகர்களின் கவனம் முழுவதும் ஐபிஎல் பக்கம் திரும்பியுள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் திருவிழாவின் 17ஆவது சீசன் வரும் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடக்க இருக்கிறது.
இதற்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் உலகக் கோப்பை போட்டிகளில் ஜொலித்த வீரர்களும், இதுவரையில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காத வீரர்களும் இடம் பெறவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
மேலும், ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்படும் வீரர்கள், விடுவிக்கப்படும் வீரரளின் பட்டியலை வரும் 26 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. அதோடு, டிரேட் முறையில் ஒவ்வொரு வீரர்களும் அணிகளுக்குள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வீரரான ரொமாரியோ ஷெப்பர்ட் மும்பை அணியிலும், ஆவேஷ் கான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரான தேவ்தத் படிக்கல் லக்னோ அணியிலும் டிரேட் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு ஏன், ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியிலும், ரோகித் சர்மாவை குஜராத் அணியிலும் டிரேட் செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் தான், இதுவரையில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் பெரிதளவில் ஜொலிக்காத வீரர்கள் இந்த ஏலத்தின் மூலமாக கழற்றிவிடப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ரூ.5.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அணியில் இடம் பெற்று விளையாடி வந்தவர் தீபக் கூடா. நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரின் 16ஆவது சீசனில் தீபக் கூடா விளையாடிய 12 போட்டிகளில் மொத்தமாக 87 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 17 ரன்கள். பெரிதாக சோபிக்காத நிலையில், அவர் கழற்றிவிடப் பட வாய்ப்பிருக்கிறது. மேலும், பெரிதாக விலையும் போகமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் மூலமாக அறிமுகமான ஜேசன் ஹோல்டர் நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் ரூ.5.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், அவர் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதுவரையில் விளையாடிய 46 போட்டிகளில் மொத்தமாக 259 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆதலால், டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் ஏலத்தில் அவர் விலை போக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் ரூ.7.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடியவர் ஜோஃப்ரா ஆர்ச்சர். இதையடுத்து 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், இவர் விளையாடிய 5 போட்டிகளில் 20 ஓவர்கள் வீசி 190 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். பேட்டிங்கில் 2 இன்னிங்ஸ் விளையாடி 4 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட உள்ளார். அதோடு, இந்த ஏலத்தில் விலை போகவும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.