
சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி
Delhi Capitals won By 25 Runs in IPL 2025 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 17ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னையை வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ் அதன் பிறகு முதல் முறையாக இப்போது தான் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாக 3ஆவது தோல்வி
சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் தொடர்ச்சியாக 3ஆவது தோல்வியை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் 2025 தொடரின் 17ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேஎல் ராகுல் 77 ரன்கள் எடுத்தார்.
டெல்லி கேப்பிடல்ஸ் 183 ரன்கள் எடுத்தது
அபிஷேக் போரெல் 33 ரன்கள் எடுத்தார். அக்ஷர் படேல் 21 ரன்கள் எடுக்கவே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க முயற்சி செய்தனர். இது டெல்லி அணியின் கலவையில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். இதன் விளைவாக, டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது (CSK vs DC Live score).
கலீல் அகமது (Khaleel Ahmed) 2 விக்கெட்
சென்னை அணியில் (CSK) கலீல் அகமது (Khaleel Ahmed) 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா, நூர் அகமது மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் அக்ஷர் படேல் தலைமையிலான டெல்லி அணி இந்த சீசனில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.
184 ரன்கள் இலக்கை துரத்த முடியாமல் போன சென்னை வீரர்கள்
இரண்டாவது இன்னிங்சில் 184 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. பேட்டிங்கில் விஜய் சங்கரை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. சங்கர் 54 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரைத் தவிர எம்.எஸ்.தோனி 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷிவம் துபே 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். டாப் 3ல் ரச்சின் ரவீந்திரா 3, டெவோன் கான்வே 13 மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்கள் எடுத்தனர்.
7ஆவது வீரராக களமிறங்கிய தோனி:
ஆர்சிபிக்கு எதிரான போட்டியின் போது தோனி 8ஆவது வீரராக களமிறங்கி விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில் இந்தப் போட்டியில் 7ஆவது வீரராக களமிறங்கினார். ஆனால், பெரிய ஷாட் எதுவும் அவர் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லவில்லை. மேலும், தோனி விளையாடிய 26 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
15 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி கேபிடல்ஸ் வெற்றி
டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பந்துவீச்சில் விப்ராஜ் நிகம் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலமாக 15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னையை தோற்கடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் தோற்கடித்திருந்தது.
6 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி கேபிடல்ஸ் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றி
மேலும், 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஐபிஎல் தொடரில் 3 போட்டியிலும் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகிலிருந்து சிஎஸ்கே 170 ரன்களுக்கு மேலான ரன் சேஸில் தோல்வி அடைந்து வருகிறது. இதற்கு முன்னதாக சென்னை மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லிக்கு எதிரான இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த சிஎஸ்கே புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்
வரும் 8ஆம் தேதி சண்டிகரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 தொடரின் 22ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.