
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது. இதில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 17 ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது, இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. உஸ்மான் கவாஜா 81 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம் 72 ரன்கள் (நாட் அவுட்) எடுக்க ஆஸ்திரேலியா 263 ரன்கள் குவித்தது.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தொடர்ந்து ஷார்ட் பந்துகளை வீசினர். ஷமி வீசிய பந்து வார்னரின் கையில் படவே அவர் மருத்துவரை அழைத்தார். இதையடுத்து அவரது கையில் பேண்டேஜ் மட்டும் போடப்படட்து.
இதே போன்று முகமது சிராஜ் வீசிய பந்து வார்னரில் ஹெல்மெட், முதுகுப்பகுதி மற்றும் தலையில் பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும், அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் தான் அவர் ஷமி பந்தில் விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 44 பந்துகளில் 3 பவுண்டரிகள் உள்பட வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ரன் கணக்கை தொடங்கி விளையாடி வருகின்றனர். கையில் காயம் பட்ட நிலையில் வார்னர் பீல்டிங் செய்ய வரவில்லை. இந்த நிலையில், அவர் 2ஆவது டெஸ்ட் போட்டியில் மீதமுள்ள ஆட்டங்களிலிருந்து விலகியுள்ளார்.
வார்னருக்குப் பதிலாக சப்ஸ்டிட்டியூட் ஆட்டக்காரராக மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், 2ஆவது இன்னிங்ஸில் வார்னருக்குப் பதிலாக ரென்ஷா தான் பேட்டிங் செய்ய வருவார்.
இதற்கு முன்னதாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வார்னர் முதல் இன்னிங்ஸில் 1 ரன்னும், 2ஆவது இன்னிங்ஸில் 10 ரன்னும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று முதல் போட்டியில் இடம் பெற்றிருந்த ரென்ஷாவும் முதல் இன்னிங்ஸில் டக் அவுட், 2ஆவது இன்னிங்ஸில் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
இதன் மூலமாக வார்னருக்குப் பதிலாக சப்ஸ்டிட்டியூட் வீரராக சேர்க்கப்பட்டுள்ள ரென்ஷாவும் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆஸி, அணிக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முன்னதாக ஜோஸ் ஹசல்வுட் காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடாத நிலையில், தற்போது எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவிற்கு எதிரான 3 மற்றும் 4 ஆவது டெஸ்ட் போட்டிகளிலிருந்து டேவிட் வார்னர் விலகியுள்ளார். ஆம், சிராஜ் வீசிய பந்து அவரது முழங்கையில் முறிவு ஏற்படும் அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், எஞ்சிய டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.