ஐபிஎல் 14வது சீசனில் மும்பையில் நேற்று நடந்த சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிஎஸ்கே அணி நிர்ணயித்த 189 ரன்கள் என்ற இலக்கை, மிக எளிதாக எட்டி வெற்றி பெற்றது டெல்லி கேபிடள்ஸ் அணி.
ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷாவின் அதிரடியான பேட்டிங்கால் டெல்லி அணிக்கு வெற்றி எளிதானது. தொடக்கம் முதலே சிஎஸ்கே பவுலர்களான தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், மொயின் அலி, சாம் கரன் ஆகிய அனைத்து பவுலர்களின் பவுலிங்கையும் பொளந்துகட்டிய பிரித்வி ஷா-தவான் ஜோடி 13.3 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 138 ரன்களை குவித்தது.
அதன் விளைவாக டெல்லி அணி 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. வழக்கமாக பவர்ப்ளேயில் விக்கெட்டை வீழ்த்தி ஆரம்பத்திலேயே பிரேக் கொடுக்கக்கூடிய தீபக் சாஹர், முக்கியமான நேரத்தில் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தக்கூடிய ஷர்துல் தாகூர், ஜடேஜா என எந்த பவுலரின் பவுலிங்கும் எடுபடவில்லை.
இதையடுத்து போட்டிக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, பேட்ஸ்மேன்கள் பணியை சரியாக செய்தனர். ஆனால் பவுலர்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்பட்டிருக்கலாம். பவுலர்கள் பந்துவீசிய விதம் கொஞ்சம் மோசமாக இருந்தது. பவுண்டரி அடிக்க ஏதுவாக பல பந்துகளை வீசினர். இந்த போட்டியில் பாடம் கற்றதால், இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார்கள் என தோனி நம்பிக்கை தெரிவித்தார்.