இந்திய அணி ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என அடுத்தடுத்து 2 பெரிய ஐசிசி தொடர்களில் தோற்று ஏமாற்றமளித்த நிலையில், 2023ல் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கு தரமான அணியை தேர்வு செய்து, வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனுடன் களமிறங்க வேண்டிய அவசியம் உள்ளது.
பும்ரா, ஜடேஜா ஆகிய நட்சத்திர வீரர்கள் காயத்தால் ஆடாதது டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. பெரிய வீரர்கள் காயத்தால் முக்கியமான தொடர்களில் பாதிப்பாக அமையும் நிலையில், வீரர்களின் ஃபிட்னெஸ் பரமாரிப்பு, பணிச்சுமை மேலாண்மை, இந்திய அணியின் செயல்பாடு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய, இன்று மும்பையில் பிசிசிஐ ஆய்வுக்கூட்டம் நடந்தது.
பிசிசிஐ ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கியமான 3 விவகாரங்கள்
இந்த கூட்டத்தில், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண், தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், பணிச்சுமை மேலாண்மை, ஃபிட்னெஸ் பராமரிப்பு ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே இருக்கும் யோ யோ டெஸ்ட் முறையுடன் டெஸ்லா டெஸ்ட்டையும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. சீனியர் வீரர்கள் ஐபிஎல்லில் ஆடுவது அவர்களது பணிச்சுமை அதிகரிப்பிற்கு காரணமாகி காயத்திற்கும் வழிவகுப்பதால், ஐபிஎல்லில் வீரர்களின் ஃபிட்னெஸை பராமரிக்க, ஐபிஎல் அணிகளுடன் இணைந்து செயல்பட தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் விவிஎஸ் லக்ஷ்மண், ஐபிஎல் அணிகளுடன் இணைந்து செயல்பட்டு, வீரர்களின் ஃபிட்னெஸை பராமரிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவரை மாதிரி டேலண்ட் தேடினாலும் கிடைக்காது.. ஒதுக்காமல் டீம்ல எடுங்க.! டிராவிட்டுக்கு கம்பீர் அறிவுரை
மேலும், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பைக்கு 20 வீரர்களை ஷார்ட் செய்துள்ளது பிசிசிஐ. ஒருநாள் உலக கோப்பைக்கு முன்பாக இந்த ஆண்டு இந்திய அணி ஆடவுள்ள 35 ஒருநாள் போட்டிகளில், இந்த 20 வீரர்கள் மட்டும் தான் சுழற்சி முறையில் இறக்கப்படுவார்கள்.