இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
வார்னர் மற்றும் ஃபின்ச் ஆகிய இருவரும் கடந்த போட்டியை போலவே அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், முதல் விக்கெட்டுக்கு 23 ஓவரி 142 ரன்களை குவித்தனர். ஃபின்ச் 60 ரன்களில் ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கிய வார்னர், 83 ரன்களுக்கு ஷ்ரேயாஸ் ஐயரின் துல்லியமான த்ரோவால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
அதன்பின்னர் ஸ்மித்தும் லபுஷேனும் இணைந்து சிறப்பாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 136 ரன்களை சேர்த்து கொடுத்தனர். அதிரடியாக ஆடிய ஸ்மித், கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் சரியாக 62 பந்தில் சதமடித்தார். சதமடித்த மாத்திரத்திலேயே 104 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் ஸ்மித் அவுட்டாக, அரைசதம் அடித்த லபுஷேன் 70 ரன்களுக்கு 49வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
டெத் ஓவரில் காட்டடி அடித்த மேக்ஸ்வெல், 29 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸை நன்றாக முடித்து கொடுத்தார். இதையடுத்து ஐம்பது ஓவரி 389 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி 390 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
இதுதான் இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட 3வது அதிகபட்ச ஸ்கோர். 2015ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 438 ரன்களையும், 2009ல் இலங்கை அணி 411 ரன்களையும் குவித்ததே இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட டாப் 2 ஸ்கோர்கள். அதற்கடுத்த 3வது அதிகபட்ச ஸ்கோர் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் அடித்த 389 ரன்கள் தான்.