ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளது. அது 28ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இருக்கலாம். சூப்பர் ஃபோர் சுற்றின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்தியா தனது இறுதிப் போட்டி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
ஆனால் பாகிஸ்தானுக்கு நிலைமை அவ்வளவு எளிதல்ல. சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளே 28ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
புள்ளிப்பட்டியலில் டாப் எந்த அணி?
சூப்பர் ஃபோரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு போட்டியை முடித்துள்ள நிலையில், தலா இரண்டு புள்ளிகளுடன் இந்தியாவும் வங்கதேசமும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
+0.689 நெட் ரன் ரேட்டுடன் இந்தியா முதலிடத்திலும், +0.121 நெட் ரன் ரேட்டுடன் வங்கதேசம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் தோற்ற இலங்கை -0.121 நெட் ரன் ரேட்டுடன் மூன்றாவது இடத்திலும், -0.689 நெட் ரன் ரேட்டுடன் பாகிஸ்தான் நான்காவது இடத்திலும் உள்ளன.