
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2025 தொடரில் அதிக விமர்சனங்களையும், அதிக எதிர்ப்புகளையும் சந்தித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். இந்த தொடரில் சிஎஸ்கே விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. மேலும், வரிசையாக 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது.
சிஎஸ்கேயில் புதிய திருப்பம்; தோல்வி, காயம் காரணமாக விலகிய ருதுராஜ்; மீண்டும் கேப்டனாகும் தோனி!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே மோசமான தோல்விய சந்தித்துள்ளது.
இந்த நிலையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் காயம் அடைந்தார். இதன் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இடம் பெறமாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக எம் எஸ் தோனி (MS Dhoni) கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகவே களமிறங்கினார்.
அதே போன்று அடுத்தடுத்த டெல்லி கெபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டார். இந்த நிலையில் தான் நாளை 11 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து சிஎஸ்கேயின் (CSK Captain MS Dhoni) கேப்டனாக தோனி செயல்படுவார் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் அறிவித்துள்ளார்.
காயமடைந்த ருதுராஜ் கெய்க்வாட்
காயமடைந்த ருதுராஜ் கெய்க்வாட் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக எஞ்சிய 9 போட்டிகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்த இருக்கிறார். இதற்கு முன்னதாக இது போன்ற ஒரு சம்பவம் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடைபெற்றது.
2022 ஆம் ஆண்டை நினைவுபடுத்தும் சிஎஸ்கே:
இதே போன்று தான் கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடைபெற்றது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்டார். ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி 10 தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.
2022ல் ரவீந்திர ஜடேஜா கேப்டன்
ஐபிஎல் 2022 தொடரில் சிஎஸ்கே வரிசையாக 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. 5ஆவது போட்டியில் வெற்றி பெற்றது. 6ஆவது போட்டியில் தோல்வி, 7ஆவது போட்டியில் வெற்றி, 8ஆவது தோல்வி, 9ஆவது போட்டியில் வெற்றி, 10ஆவது போட்டியில் தோல்வி, 11ஆவது போட்டியில் வெற்றி, கடைசி 3 போட்டிகளில் தோல்வி என்று மொத்தம் 4 போட்டிகளில் வெற்றி கண்டது.
இந்த தொடரில் முதல் 8 போட்டிகளுக்கு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக இருந்த நிலையில் மோசமான தோல்வி காரணமாக எஞ்சிய போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜடேஜா விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக எஞ்சிய 4 போட்டிகளுக்கு தோனி கேப்டனாக செயல்பட்டார். இப்போது மீண்டும் இதே போன்ற ஒரு நிலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 5 போட்டிகளில் 4 தோல்வி ஒரு வெற்றி என்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. எஞ்சிய 9 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது எல்லா போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 10 போட்டிகளில் வெற்றி என்ற கணக்கில் மொத்தமாக 20 புள்ளிகள் கிடைக்கும்.
மேலும் மற்ற அணிகள் 10 போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்றால் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். எஞ்சிய 9 போட்டிகளில் 8 வெற்றி கிடைத்தால் 18 புள்ளிகள் கிடைக்கும்.
7 போட்டிகளில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் கிடைக்கும்.
6 போட்டிகளில் வெற்றி என்றால் 14 புள்ளிகள் கிடைக்கும்.
5 போட்டிகளில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் கிடைக்கும்.
அதன் பிறகு பிளே ஆஃப் வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பில்லை. கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முறையே புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருந்த குஜராத் டைட்டன்ஸ் 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகள் பெற்றிருந்தது. கடந்த சீசனில் கேகேஆர் 9 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.
ஆனால், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது என்பது சற்று சவாலான ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு காரணமாக விளையாடிய 5 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி மட்டுமே கிடைத்திருக்கிறது.