IPL 2023: மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகின்றன.. தோனி மட்டும் தான் வீரர்களை உருவாக்குகிறார்..!

First Published | Apr 18, 2023, 2:35 PM IST

மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை தேடுகின்றன; தோனி மட்டும் தான் வீரர்களை உருவாக்குகிறார் என்று ஆகாஷ் சோப்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.
 

தோனி ஒரு முழுமையான கிரிக்கெட்டர். அதிரடியான பேட்டிங், அபாரமான விக்கெட் கீப்பிங் ஆகியவற்றை எல்லாம் விட மிகச்சிறந்த கேப்டனாக அறியப்படுபவர் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணி வென்று கொடுத்தவர் தோனி. 3 ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரரும் அவரே.

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கும் தோனி, அந்த அணிக்கு 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல்லில் நடப்பு சீசனுக்கு முன் நடந்த 15 சீசன்களில் 2 சீசனில் சிஎஸ்கே ஆடவில்லை. ஆடிய 13 சீசன்களில் 2 சீசனைத்தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு முன்னேறியது. அதற்கு முக்கியமான காரணம் தோனியின் கேப்டன்சி.

Tap to resize

களவியூகம், வீரர்களை பயன்படுத்தும் விதம், இக்கட்டான சூழல்களில் பதற்றம் அடையாமல் நிதானமாக செயல்பட்டு வெற்றியை வசமாக்குவது, ஃபீல்டிங் செட்டப், உள்ளுணர்வின்படி செயல்பட்டு வெற்றி காண்பது மிகச்சிறந்த கேப்டனாக திகழ்பவர் தோனி. கேப்டன்சிக்கே பெயர்பெற்றவர் தோனி. 

ஐபிஎல்லில் மற்ற அணிகளில் சரியாக ஆடாத வீரர்கள் கூட, தோனியின் கேப்டன்சியில் அபாரமாக ஆடி சிஎஸ்கேவின் மேட்ச் வின்னர்களாக திகழ்ந்திருக்கின்றனர். அந்தளவிற்கு ஒரு வீரரிடமிருந்து அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும் வித்தை அறிந்தவர் தோனி. அதற்கு மிகச்சிறந்த உதாரணம், ஷேன் வாட்சன். ஷேன் வாட்சன் ஆர்சிபியிலும் ஆடியிருக்கிறார். ஆனால் அந்த அணியில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. சிஎஸ்கே அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி, 2018ல் ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இந்திய அணியிலிருந்தும் ஐபிஎல்லில் இருந்தும் ஒதுக்கப்பட்ட அஜிங்க்யா ரஹானேவை சிஎஸ்கே அணியில் எடுத்து, அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவந்துள்ளார் தோனி. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி 27 பந்தில் 61 ரன்களை குவித்த ரஹானே, ஆர்சிபிக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக ஆடி 20 பந்தில் 37 ரன்கள் அடித்தார். ரஹானேவின் இன்னிங்ஸ் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் வேகம் தடைபடாமல் தொடர்ந்து அதிகரிக்க உதவியது..
 

அதேபோல ஷிவம் துபே இதற்கு முன் ஆடிய ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக பெரியளவில் பங்களிப்பு செய்ததில்லை. ஆனால் சிஎஸ்கேவில் தோனியின் கேப்டன்சியில் அசத்திவருகிறார். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடிய துபே 27 பந்தில் 52 ரன்களை விளாசினார். இவரது அதிரடியான பேட்டிங்கும் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தது.
 

இந்நிலையில், தோனி குறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, அஜிங்க்யா ரஹானேவிற்கு பெங்களூரு ரொம்ப பிடிக்கும். பொதுவாகவே பெங்களூருவில் சிறப்பாக ஆடுவார். இந்த போட்டியிலும் நன்றாக ஆடினார். ஷிவம் துபேவும் அருமையாக ஆடினார். இதற்கு முன் துபே, ஆர்சிபி, ராஜஸ்தான் அணிகளில் ஆடியிருக்கிறார். ஆனால் அங்கெல்லாம் இந்தளவிற்கு ஆடியதில்லை. தோனியின் கேப்டன்சியில் அருமையாக ஆடுகிறார். அதுதான் தோனிக்கும் மற்ற அணிகளுக்கு உள்ள வித்தியாசம். மற்ற அணிகள் வீரர்களை தேடுகின்றன. தோனி மட்டும்தான் வீரர்களை உருவாக்குகிறார் என்றார் ஆகாஷ் சோப்ரா.

Latest Videos

click me!