
ஐபிஎல் 2026 கோப்பையை ஆர்சிபி அணி தட்டித்துக்கியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்சிபி அணி தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்றுள்ளது. இந்த போட்டிக்கு பிறகு அதிக ரன்கள் குவித்த வீரர்கள், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள், வளர்ந்து வரும் வீரருக்கான விருது, அதிக பவுண்டரி அடித்த வீரர்கள், அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
ஐபிஎல் 2026 சீசனில் அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு கேப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி தட்டிச் சென்றார்.இந்த சீசனில் அவர் 16 இன்னிங்ஸ்களில் விளையாடி, 237.31 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் 776 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 1 சதம் மற்றும் 5 அரைசதங்களும் அடங்கும்.
அதிக சிக்சர் அடித்த வீரர், சூப்பர் ஸ்டிரைக்கர் விருது
அதுமட்டுமல்ல, இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரரும் சூர்யவன்ஷிதான். மொத்தம் 72 சிக்சர்கள் பறக்க விட்டுள்ளார். ஆகையால் அதிக சிக்சர்கள் அடித்தவர்களுக்கான விருதையும் வைபவ் சூர்யவன்ஷி வென்றார். இதுமட்டுமின்றி 237 என்ற அசாத்தியமான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவித்ததற்காக, இந்த சீசனின் 'சூப்பர் ஸ்டிரைக்கர்' (Super Striker) விருதையும் வைபவ் சூர்யவன்ஷி வென்றார் இந்த மைல்கல் சாதனைக்காக அவருக்குப் பரிசாக ஒரு கார் வழங்கப்பட்டது. மேலும் ஐபிஎல் 2026 சீசனின் மிகச்சிறந்த இளம் வீரருக்கான 'எமர்ஜிங் பிளேயர்' (Emerging Player of the Season) விருதையும் சூர்யவன்ஷி தட்டிச் சென்றுள்ளார்.
இது தவிர அனைத்துத் துறைகளிலும் அசத்திய வைபவ் சூர்யவன்ஷி, 436.5 புள்ளிகளுடன் இந்த சீசனின் மிகச்சிறந்த வீரருக்கான 'மோஸ்ட் வேல்யுபில் பிளேயர்' (Most Valuable Player - MVP) விருதையும் வென்று சாதனை படைத்துள்ளார். ஆக மொத்தம் அதிக ரன்கள் குவித்த வீரர், அதிக சிக்சர்கள் விளாசிய வீரர், சிறந்த சூப்பர் ஸ்டிரைக்கர் வீரர், சிறந்த வளர்ந்து வரும் வீரர், சிறந்த மதிப்புக்க வீரர் என அனைத்து விருதுகளையும் வைபவ் சூர்யவன்ஷி தட்டித்தூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2026 தொடரில் ஒட்டுமொத்த விருதுகளையும் வாரிக்குவித்த வைவப் சூர்யவன்ஷி லட்சக்கணக்கில் தொகையை அள்ளியுள்ளார். அதாவது ஐபிஎல் அதிகாரப்பூர்வ விதிகளின்படி, அவர் வென்ற ஆரஞ்சு கேப் விருதுக்கு ₹10 லட்சமும், தொடரின் மிகச்சிறந்த வீரருக்கான 'மோஸ்ட் வேல்யுபில் பிளேயர்' (MVP) விருதுக்கு ₹10 லட்சமும், இந்த சீசனின் 'எமர்ஜிங் பிளேயர்' விருதுக்கு ₹20 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, அதிரடியாக விளையாடியதற்காக வழங்கப்பட்ட 'சூப்பர் ஸ்டிரைக்கர்' விருதுக்காக ₹10 லட்சம் ரொக்கப் பணத்துடன், தோராயமாக ₹15 லட்சம் மதிப்புள்ள புதிய சொகுசு கார் ஒன்றும் அவருக்குப் பரிசாகக் கிடைத்துள்ளது. மேலும், சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசியதற்கான விருதுக்காக தனியாக ₹10 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 மெகா விருதுகளையும் சேர்த்து வைபவ் சூர்யவன்ஷி வென்ற விருதுகளின் ஒட்டுமொத்த மதிப்பு தோராயமாக ₹75 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, இந்த சீசனில் மிகச்சிறப்பாக பந்துவீசி 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரருக்கான 'பர்பிள் கேப்' (Purple Cap) விருதை அவர் வென்றார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் தூணாக விளங்கிய சாய் சுதர்ஷன், இந்தத் தொடரில் மொத்தம் 75 பவுண்டரிகளை விளாசி, அதிக பவுண்டரிகள் அடித்த வீரருக்கான விருதை தட்டித் தூக்கினார். இந்த சீசனில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய முகமது சிராஜ், மொத்தம் 172 டாட் பால்கள் (Dot balls) வீசி, இந்த சீசனில் அதிக டாட் பால்கள் வீசிய வீரருக்கான விருதை வென்றார்.