புண்ணிய மாதங்களில் முக்கியமானது மாசி மாதம். உத்திராயண புண்ணிய காலத்தில் வருகின்ற இந்த மாதத்தில் நாம் செய்யும் விரதங்கள், வழிபாடுகள் அனைத்திற்கும் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். மாசி மாதத்தில் விரதங்களை கடைப்பிடிப்பவர்களுக்கு அந்த ஆண்டு முழுவதும் நல்ல பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
பெரும்பாலானோர் அதிகாலையில் எழுந்து நீராடி விரதமிருந்து விநாயகரை வழிபட தொடங்கி இருப்பார்கள். அப்படி விரதம் இருக்க இயலாதவர்கள், இன்றைய தினம் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். மாலை வேளையில் தூய்மையான நீரில் நீராடி விநாயகர் வழிபாடு செய்யலாம்.
வீட்டில் விநாயகரை வழிபட நினைப்பவர்கள், வீட்டு பூஜையறையில் இருக்கும் விநாயகர் சிலை அல்லது திருவுருவப்படத்திற்கு பூஜைகள் செய்து வழிபடலாம். முக்கியமாக மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, அவருக்கு பூஜை செய்யலாம். இதையடுத்து விநாயகர் படம் அல்லது சிலைக்கு பூஜைகள் மேற்கொள்ளவேண்டும்.
சதுர்த்தி அன்று விநாயகரை குளிர செய்ய அஷ்டோத்திரங்களை உச்சரித்து வழிபடலாம். இதை சொல்ல முடியாதவர்கள் விநாயகர் அகவல் பாடல்களைப் பாடி வழிபடலாம். இன்றைய தினம் விநாயகரின் நாமங்களைச் சொல்லி கொண்டே அருகம்புல் அர்ச்சனை செய்வது நல்லது. வினை தீர்க்கும் ஆனைமுகத்தோனுக்கு எளிய நைவேத்தியங்கள் தான் விருப்பம். தனித்தனியாக பிரசாதம் செய்ய முடியாதவர்கள் பொரி, கடலை, வெல்லம் ஆகியவை வைத்து வழிபடலாம்.