மாசி மாதம் கடவுள் வழிபாட்டிற்கான சிறந்த மாதமாக திகழ்கிறது. இது மகா சிவராத்திரிக்கு அடுத்து வரும் முக்கியமான நாள். 11ஆவது தமிழ் மாதமான மாசி மாதத்தில் பௌர்ணமி திதியுடன் வருகின்ற மகம் நட்சத்திர நாளையே 'மாசி மகம்' என்போம். இதனை இந்து மக்கள் கடலாடும் விழா எனவும் கொண்டாடிவருகின்றனர்.
குறிப்பாக மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளில் கூட புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக நம்பிக்கை உள்ளது. அது மட்டுமின்றி மாசி மகம் அன்று புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை கும்பகோணத்தில் மகாமகம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் வடபகுதிகளில் இதனை கும்பமேளா என்பார்கள்.
மாசி மகம் வரலாறு தெரியுமா?
வருண பகவான் பிரம்மகஹ்தி தோஷத்தால் பீடித்தபோது கடலில் மூழ்கியே இருந்தாராம். அந்த தோஷம் விலக சிவ பெருமானை மனமுருகி வணங்கினார். அவரின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து, சிவ பெருமான் அருள் பாலித்தார். வருண பகவான் தோஷத்தில் இருந்து நிவாரணம் அடைந்த தினம் தான் மாசி மகம் ஆகும். இந்த தினத்தில் புனித நீராடும் நபர்களுக்கு பாவங்களை போக்கிவிட சிவனிடம் வருண பகவான் அருள் செய்ய கேட்டு கொண்டாராம். அதனை கேட்ட சிவ பெருமானும் கேட்ட வரத்தை கொடுத்தாராம். வருண பகவானுக்கு முழுமையாக தோஷ நிவர்த்தி கிடைத்த தினம் என்பதால் அன்றைய தினம் புனித நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது.
சிவனிடம், சக்தியே பெரியது என விவாதித்ததின் பலனாக சிவனின் சாபம் வந்து விழுந்து வலம்புரி சங்காக மாறி தாமரையில் தவமிருந்தால் அன்னை பார்வதி. இந்த நேரம் தட்ச பிரஜாபதி தன் இணையாளுடன் சென்று யமுனை நதியில் நீராடினான். அப்போது வலம்புரி சங்கினை அவர் கையில் எடுத்ததும், எண்ணி பார்க்காத வகையில் அழகிய பெண் குழந்தையாக அந்த சங்கு மாறியது. இதைக் கண்டு அவர் திகைப்புற்றார். அந்த பெண் குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்று தாட்சாயிணி என பெயரிட்டு வளர்தெடுத்தார். இப்படி அம்பிகை வலம்புரி சங்காக கிடந்து, தாட்சாயிணியாக உருவெடுத்த நாளும் மாசி மகம் தான்
யாரை வழிபட வேண்டும்?
மாசி மகம் வரும் நாளில் சிவ பெருமானையும், மகா விஷ்ணுவையும் வழிபட வேண்டும். சிவபெருமான், விஷ்ணு பகவாம், பிரம்மா ஆகியோர் இணைந்த ரூபமான மருகப் பெருமானை அன்று வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்.
மாசி மகம் 2023 எப்போது வருகிறது?
ஆண்டிற்கு ஒருதடவை மட்டும் வரும் மாசி மகம், 2023ஆம் ஆண்டு மார்ச் 06 ஆம் தேதி வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் மாசி 22 ஆம் தேதி வருகிறது. மகம் நட்சத்திரம் மார்ச் 05ஆம் தேதி அன்று இரவு 09.30 மணிக்கு தொடங்கி மார்ச் 07 ஆம் தேதி நள்ளிரவு 12.05 மணி வரை இருக்கிறது. பௌர்ணமி திதியோ மார்ச் 06 ஆம் தேதி அன்று மாலை 05.39 தொடங்கி மார்ச் 07ஆம் தேதி இரவு 07.14 மணி வரை நீடிக்கிறது.
மாசி மகம் சிறப்பு
மாசி மகம் என்பது பித்ரு வழிபாட்டிற்கும், தர்ப்பணம் அளிக்கவும் ஏற்ற நாளாகும். எப்போதும் அமாவாசை நாள் தான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நாளாக சொல்லப்படும். ஆனால் மாசி மாதத்தில் வரும் பெளர்ணமி அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் இன்று சிறந்த புண்ணியம் கிடைக்குமாம். இதனால் முன்னோரின் ஆசி கிடைக்கும். மாசி மகம் வரும் நாளில் புனித நீராடுதல் மிகச்சிறந்த பலன்களை அள்ளி தரும்.
இதையும் படிங்க: யார் யாருக்கு ராஜயோகம்.. பல நூற்றாண்டுகளுக்கு பின் 4 ராசிகளுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. உங்க ராசி என்ன?