பிறக்கும் பொழுது நமது நட்சத்திரத்தை பார்ப்பது போலவே, ஒருவர் இறக்கும்பொழுதும் நட்சத்திரத்தை பார்க்க வேண்டும். சில நட்சத்திரங்களில் நிகழும் இறப்புகள் ‘தனிஷ்டா பஞ்சமி’ எனப்படுகிறது. இந்த மரணங்கள் ஏன் சிக்கலானது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தனிஷ்டம் என்பது அவிட்ட நட்சத்திரத்தை குறிக்கும். பஞ்சமி என்பது ஐந்து நட்சத்திரங்களைக் குறிக்கும். எனவே அவிட்டம் தொடங்கி அதற்கு பின்வரும் சில நட்சத்திரங்களில் மரணம் நிகழ்வது என்பது தனிஷ்டா பஞ்சமி என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ‘வசு பஞ்சக தோஷம்’ என்றும் அழைப்பார்கள். இது ஒரு துர்தேவதையாகவும் சில இடங்களில் கூறப்படுகிறது. ஜோதிட சாஸ்திரங்களின் கூற்றுப்படி இந்த நட்சத்திரத்தில் இறப்பவர்களின் ஆன்மா மேல் உலகம் செல்வதற்கு தடை ஏற்படுகிறது. மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் 13 நட்சத்திரங்களில் மரணமடைபவர்களுக்கு மேலோகம் செல்ல தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
25
தனிஷ்டா பஞ்சமிக்குரிய 13 நட்சத்திரங்கள் எவை
அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, ரோகிணி, கார்த்திகை, உத்திரம், மிருகசீரிஷம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய 13 நட்சத்திரங்களில் ஒருவர் இறக்கும் பொழுது, இறந்த ஆத்மாவின் மோட்ச பயணத்தில் தடைகள் ஏற்படுவதாகவும், அந்த குடும்பத்தில் சில சிக்கல்களும் துரதிஷ்டங்களும் தொடர்ச்சியாக ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது. இந்த நட்சத்திரங்களில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் எமலோகம் செல்வதற்கு அல்லது முக்தி அடைவதற்கு குறிப்பிட்ட காலம் வரை அடைக்கப்படுகின்றன என நம்பப்படுகிறது. இதன் காரணமாக ஆத்மா மேல் உலகிற்கும் செல்ல முடியாமல், பூலோகத்திற்கும் செல்ல முடியாமல், மீண்டும் உடலுக்குள் செல்ல ஆர்வம் கொண்டு பூமியிலேயே உலவத் தொடங்கும் என்றும், இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு சில தொந்தரவுகளை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
35
13 நட்சத்திரங்களில் நிகழும் மரணம் ஏன் சிக்கலானவை?
சில குடும்பங்களில் தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரத்தில் ஒருவர் மரணம் அடைந்தால் அதே வீட்டில் மேலும் சில மரணங்கள் அல்லது பெரிய கண்டங்கள் சிரமங்கள் ஏற்படும் என நம்பப்படுகிறது. இதனால் தான் இந்த நட்சத்திரங்களின் நிகழும் மரணங்கள் சிக்கலானவை என குறிப்பிடப்படுகின்றன. சந்திரனின் நட்சத்திரங்களாலும், சூரியனின் நட்சத்திரங்களாலும் மரணம் அடையும் ஆத்மாக்கள் அவ்வளவு சீக்கிரம் பூமியை விட்டு விலகுவதில்லை. தனிஷ்டா பஞ்சமி ஒரு துர்தேவதையாக பார்க்கப்படுகிறது. இந்த நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையாக பரிகாரங்கள் செய்யாவிட்டால், துர்தேவதை அந்த வீட்டை ஆட்டிப் படைக்கும். இந்த தோஷத்தின் தீவிரத்தை குறைக்க சில பரிகாரங்கள் ஜோதிட ரீதியாக பரிந்துரைக்கப்படுகின்றன.
முற்காலங்களில் இந்த நட்சத்திரங்களில் இறந்தவர்களின் உடலை வீட்டின் பின் வாசல் வழியாக சுவரை இடித்து எடுத்துச் சென்றதாகவும், மேற்கூரையை பிரித்து எடுத்துச் சென்றது போன்ற கடுமையான சடங்குகள் இருந்துள்ளது. ஆனால் தற்போதைய காலத்தில் இந்த வழக்கங்கள் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. எனவே இறந்தவரை சூரியன் மறைவதற்கு முன்பு தகனம் செய்ய வேண்டும். இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை யாரும் பயன்படுத்தாமல், தனி அறையில் பூட்டி வைக்க வேண்டும். ஒரு வெண்கல கிண்ணத்தில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றி அந்த கிண்ணத்தை தானம் செய்ய வேண்டும். அடைப்பு காலம் வரை வீட்டிற்குள் செங்கல் வைத்து சிறு வீடு போல் அமைத்து மாலை தீபம் ஏற்றி தண்ணீர், நெய்வேத்தியம் வைத்து கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். கற்பூர ஆரத்துக்கு பின்னர் தீபம் அணையாதவாறு கூடையைப் போட்டு மூடி வைக்க வேண்டும். அடைப்பு காலத்திற்குப் பின்னர் முறைப்படி அதற்கான கிரியைகளை முறையாக செய்து கொள்ள வேண்டும்.
55
முன்னோர்களின் ஆன்மா முக்தி அடையும்
இந்த நம்பிக்கைகள் அவரவர் நம்பிக்கை சார்ந்தவை. இருப்பினும் நம் முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்ற இந்த சடங்குகள் மற்றும் பரிகாரங்கள் ஒருவரின் மன அமைதிக்கும், இறந்த ஆன்மாவின் சாந்திக்கும் உதவும் வகையில் அமைந்துள்ளன. இந்த 13 நட்சத்திரங்களில் இறந்தவர்களின் ஆன்மா மேல் உலகம் செல்ல முடியாமல் தவிக்கும் பொழுது இந்த பரிகாரங்களை முறையாக மேற்கொண்டால் அவர்களின் ஆன்மா மன நிறைவோடு முக்தி அடையும் என கூறப்படுகிறது. உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அனுபவம் மிக்க ஜோதிடரை அணுகி ஆலோசனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.