Aadi Friday: ஆடி 3வது வெள்ளி.. அம்மன் உங்கள் வீட்டிற்கு வர இந்த ஒரு பூஜையை மறக்காம பண்ணுங்க.!

Published : Jul 31, 2025, 04:56 PM IST

ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் வீட்டில் செய்ய வேண்டிய முக்கிய வழிபாடு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
ஆடி 3வது வெள்ளி வழிபாட்டு முறைகள்

தமிழகத்தைப் பொறுத்தவரை சக்தி வழிபாடு என்பது மிகவும் பிரபலமானது. பெண் தெய்வங்களை வழிபடும் மரபு தமிழகத்தில் காலம் காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் அம்மனை வழிபடுவதற்கு உகந்த மாதமாக ஆடி மாதம் விளங்கி வருகிறது. ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் செய்யும் வழிபாட்டின் மூலம் அம்மனை நம் வீட்டிற்குள் வர வைக்க முடியும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. அம்மன் நம் இல்லத்திற்கு வர ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டிய முக்கிய வழிபாடு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
கும்பம் பாலிப்பது எப்படி?

ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 1, 2025 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் வீட்டை நன்கு சுத்தம் செய்து பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களை சுத்தமான துணியால் துடைத்து சந்தனம் குங்குமம் இட்டு பூக்கள் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அம்மனை வீட்டிற்குள் அழைப்பதற்கு கும்பம் பாலிக்க வேண்டும். பூஜை அறை அல்லது வீட்டின் ஹாலில் பச்சரிசியால் மாக்கோலம் இட வேண்டும். அதன் மீது வாழை இலை போட்டு பச்சரிசி அல்லது நெல் பரப்பிக் கொள்ள வேண்டும். அதன் மேல் ஒரு மணப்பலகை வைத்து அதில் ஒரு சிறிய செம்பு அல்லது குடம் வைக்க வேண்டும். அந்த குடத்தில் வேப்பிலை, மஞ்சள் குங்குமம் ஆகியவற்றை நிரப்பி அதன் மேல் தேங்காய் ஒன்றை வைத்து கும்பம் பாலிக்க வேண்டும். கும்பத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். கும்பத்தின் அருகில் மஞ்சளில் விநாயகர் பிடித்து வைத்து அதற்கு அருகம்புல் சாற்ற வேண்டும்.

35
அம்மனை ஆவாஹனம் செய்ய வேண்டும்

இந்த கும்பத்தை அம்மனாக நினைத்து அதில் அம்மனை ஆவாஹனம் செய்ய வேண்டும். இது அம்மனை உங்கள் வீட்டிற்குள் அழைப்பதாக கருதப்படுகிறது. இந்த வழிபாட்டின்போது அம்மனுக்கு தளிகை படையலிட வேண்டியது அவசியம். ஐந்து வகையான கலவை சாதங்கள் அல்லது வடை, பாயாசம் உள்ளிட்டவை படைத்து வழிபடலாம். அம்மனுக்கு பிடித்த கூழ் படைக்கலாம். சர்க்கரைப் பொங்கல், கேசரி, பாயாசம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் என படைத்து வழிபடலாம். மேலும் துள்ளுமாவு செய்து அதை அம்மனுக்கு படைத்துவிட்டு பின்னர் அனைவரும் உட்கொள்ளலாம். இந்த வழிபாடை காலையில் செய்து முடிக்க வேண்டும். அம்மன் சிலை இருந்தால் அதற்கு பால், பன்னீர், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து தீபாரதனை காட்ட வேண்டும்.

45
மாலை செய்ய வேண்டிய திருவிளக்கு பூஜை

காலை இந்த பூஜையை முடித்த பின்னர், மாலை 6 மணிக்கு கும்பத்திற்கு முன்பாக குத்து விளக்கு ஏற்ற வேண்டும். குலதெய்வம் உள்ளிட்ட பிற தெய்வங்களை மனதில் நினைத்து தங்கள் குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்க வேண்டிக்கொண்டு விளக்கை ஏற்ற வேண்டும். குத்து விளக்குக்கு முன்பாக ஒரு வெற்றிலை வைத்து அதில் குங்குமத்தை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். குங்குமத்தை ரிஷபம் முத்திரையில் அதாவது மோதிர விரல், நடுவிரல், கட்டைவிரல் ஆகியவற்றை சேர்த்து எடுத்து குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாட்டை முடித்த பிறகு குங்குமத்தை வீட்டில் உள்ள அனைவரும் சூடிக் கொள்ள வேண்டும். குறிப்பாக சுமங்கலி பெண்கள், திருமணமாகாத பெண்கள் இந்த குங்குமத்தை வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யும் பொழுது அம்மனின் நாமங்களையும், மந்திரங்களையும், 108 பெயர்களையும் கூறிக் கொண்டே அர்ச்சனை செய்ய வேண்டும்.

55
ஆடி வெள்ளி பூஜையால் கிடைக்கும் பலன்கள்

ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையில் திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் மிகுந்த சிறப்பான நாளாக கருதப்படுகிறது. திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்குரியது என்பதால் இது சிவன் பார்வதி இருவரையும் ஒன்றாக வழிபடும் பலன்களை தருகிறது. இந்த நாளில் கும்பம் பாலித்து, விளக்கு பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத் தடை உள்ளவர்களுக்கு தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். செல்வம் பெருகும். கணவரின் ஆயுள் பலம் வேண்டி சுமங்கலி பெண்கள் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையில் இந்த பூஜையை மேற்கொள்ளலாம். பூஜை முடித்த பின்னர் மாலை அம்மன் கோயில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories