
ஆடி அமாவாசை முன்னோர்களை வழிபடுவதற்கும், அவர்களின் ஆசிகளைப் பெறுவதற்கும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது. சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணையும் நாள்தான் அமாவாசை. ஆடி மாதம் கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது, சந்திரன் கடக ராசியில் சூரியனுடன் சேரும் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது. இந்த நாளில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வதன் மூலம், பித்ரு தோஷங்கள் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். ஆடி அமாவாசைக்கு எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த வருடம் ஆடி அமாவாசை ஜூலை 24 ஆம் தேதி அதிகாலை 3:06 மணிக்கு தொடங்கி ஜூலை 25 அதிகாலை 1:48 வரை நீடிக்கிறது. அமாவாசை விரதம் இருப்பவர்கள் முந்தைய நாளே வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்து, தண்ணீர் விட்டு கழுவி, பூஜை அறையை அலங்கரிக்க வேண்டும். சுவாமி படங்களை துடைத்து சந்தனம், குங்குமம் இட்டு தயாராக வைக்க வேண்டும். தர்ப்பணத்திற்கு தேவையான எள், பச்சரிசி மாவு, வாழை இலை, தர்ப்பைப்புல், குவளை போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். அமாவாசை அன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டில் உள்ள அனைவரும் தலையில் எண்ணெய் தேய்க்காமல் குளிக்க வேண்டும். முடிந்தால் புனித நதிகளிலோ அல்லது கடலிலோ நீராடுவது விசேஷம். முடியாதவர்கள் வீட்டிலேயே குளித்து சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
ஆடி அமாவாசையின் முக்கிய சடங்கு தர்ப்பணம் கொடுப்பது ஆகும். மறைந்த முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும், அவர்களின் ஆசியைப் பெறவும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். முடிந்தவர்கள் புண்ணிய ஸ்தலங்களான காசி, இராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கோ அல்லது தமிழகத்தின் புண்ணிய நதிகளாக இருக்கும் காவிரி போன்ற ஆற்றங்கரைகளுக்குச் சென்றோ தர்ப்பணம் கொடுக்கலாம். நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே புரோகிதரை வரவழைத்து அவர்களின் வழிகாட்டுதலின்படி தர்ப்பணம் செய்வது சிறந்தது. புரோகிதர்களை வைத்து தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் நீங்களே முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் கலந்து முன்னோர்களை வேண்டி அர்ப்பணிக்கலாம். தந்தை இல்லாதவர்கள் அல்லது பெற்றோருக்கு திதி திரியாதவர்கள் ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்கலாம். ஆண்கள் மட்டுமே தர்ப்பணம் கொடுக்க வேண்டும். சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
வீட்டிலேயே முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைத்து படையல் இடவேண்டும். பொதுவாக உப்பு, புளி, காரம் ஆகியவற்றை குறைத்து சாத்வீகமாக படையல் தயாரிக்க வேண்டும். தலைவாழை இலையில் படையல் இடவேண்டும். படையலுக்காக சமைத்த எந்த உணவையும் யாரும் சாப்பிடக்கூடாது. படையலிட்டு தூபம் காட்டி வழிபட்ட பின்னரே உணவு உண்ண வேண்டும். படையலின் ஒரு பகுதியை காகத்திற்கு வைக்க வேண்டும். காகம் முன்னோர்களின் அம்சமாக கருதப்படுகிறது. காகம் உணவை எடுத்துக் கொண்டால் முன்னோர்கள் அதை ஏற்றுக் கொண்டதாக ஐதீகம். முழு நாள் விரதம் இருப்பவர்கள் காலையிலிருந்து இரவு வரை உட்கொள்ளாமல் இருக்கலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் தர்ப்பணம் மற்றும் படையல் முடியும் வரை உணவு உட்கொள்ளாமல் இருந்து, பின்னர் சமைத்த உணவை சாப்பிடலாம். பால் பழங்கள் மற்றும் உட்கொண்டு விரதம் இருக்கலாம். அமாவாசை நாளில் விரதம் இருப்பவர்கள் பகலில் தூங்குதல் கூடாது.
ஆடி அமாவாசை அன்று முடிந்தவரை ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் தானங்கள் செய்வது மிகவும் புண்ணியங்களை தேடித் தரும். குறிப்பாக உணவில்லாதவர்களுக்கு அன்னதானம், உடைமை இல்லாதவர்களுக்கு வஸ்திரதானம் செய்வது மிகுந்த புண்ணியம். பித்ரு தோஷங்களை நீக்கும் சிறந்த பரிகாரங்களாக இதை பார்க்கப்படுகிறது. முன்னோர்கள் சுமங்கலியாக இறந்திருந்தால் சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து உணவு பரிமாறி அவர்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களை வழங்கலாம். விரதம் முடித்த பின்னர் அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று முன்னோர்களை நினைத்து, அவர்கள் மோட்சத்தை அடைய வேண்டி வழிபட வேண்டும். சிவபெருமானை தரிசிப்பது நல்லது. தரிசனம் முடிந்த பின்னர் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
ஆடி அமாவாசை தினத்தில் வீட்டின் வாசலின் கோலம் இடுதல் கூடாது. பித்ருபூஜை முடிக்கும் வரை வீட்டில் செய்யப்படும் அன்றாட பூஜைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சுப காரியங்களான திருமணம், கிரகப்பிரவேசம் அல்லது புதிய தொடக்கங்கள் ஆகியவற்றை அமாவாசை தினத்தில் செய்வதை தவிர்க்க வேண்டும். இது முன்னோர்களுக்கான நாள் என்பதால் இந்த நாளில் எந்த ஒரு சுப காரியங்களையும் மேற்கொள்ளுதல் கூடாது. ஆடி அமாவாசை விரதம் இருக்கும் கணவருக்கு சமைக்கும் மனைவி ஒரு பிடியாவது சாப்பிட்ட பிறகு சமைக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே பட்டினியாக இல்லாமல் பெண்கள் ஒரு பிடியாவது சாப்பிட்ட பிறகு சமைக்க தொடங்க வேண்டும். ஆடி அமாவாசை அன்று செய்யப்படும் பித்ரு தர்ப்பணம், விரதம் முன்னோர்களின் ஆத்மாவுக்கு சாந்தியை அளிப்பதுடன் அவர்களின் ஆசியைப் பெறவும் உதவுகிறது.
முன்னோர்களின் ஆசி கிடைத்தால் குடும்பத்தில் உள்ள தடைகள், தோஷங்கள், கர்ம வினைகள் ஆகியவை நீங்கி வாழ்வில் சுபிட்சம், அமைதி, மகிழ்ச்சி வம்ச விருத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இந்த ஆடி அமாவாசை தினத்தில் உங்கள் முன்னோர்களை நினைத்து வழிபட்டு அவர்களின் ஆசீர்வாதத்தை பெறுங்கள்.