
உத்தராயண காலம் முடிந்து தக்ஷிணாயன காலம் தொடங்கியுள்ளது. தக்ஷிணாயன காலத்தின் முதல் மாதமான ஆடி மாதத்தின் தேய்பிறையில் வரும் ஏகாதசி காமிகா ஏகாதசியாகும். இது மிகவும் புண்ணியமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் பெருமாளை வழிபட்டு விரதம் இருந்தால் சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஏகாதசி விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
காமிகா ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு பல பலன்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த விரதம் இருப்பவர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களில் இருந்து முழுமையாக விடுபடுவார்கள். ஏழு தலைமுறை பாவங்கள் நீங்கும். விரதம் கடைப்பிடிப்பவர்களின் முன்னோர்கள் பாவங்களும் நீங்கி, அவர்களுக்கும் மோட்சம் கிட்டும். இந்த விரதத்தை முழுமையாக அனுஷ்டிப்பவர்களுக்கு அஸ்வமேத யாகம், கோ தானம் போன்ற உயர்ந்த யாகங்களை செய்த பலன்களைப் பெறுவார்கள். புனித நதிகளில் நீராடி கிடைக்கும் புண்ணியத்தைப் போலவே காமிகா ஏகாதசியன்று விஷ்ணுவை வணங்குவதன் மூலமும், விரதத்தின் கதையை கேட்பதன் மூலமும் அதிக பலன் கிடைக்கும். பெருமாளின் முழுமையான அருள் கிடைத்து செல்வ, செழிப்பு, அமைதி, மகிழ்ச்சி ஆகியவை பெருகும். வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும்.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முந்தைய நாளான தசமி திதியிலேயே விரதத்தை தொடங்க வேண்டும். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தலைக்கு குளிக்க வேண்டும். இறைச்சிகள், அசைவ உணவுகள், முட்டை, வெங்காயம், பூண்டு, மது போன்றவற்றை தவிர்த்து, சாத்வீக உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும். மதிய உணவுக்குப் பின்னர் எந்த உணவையும் உண்ணாமல் பழம் மற்றும் பால் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கோபத்தை தவிர்த்து அமைதியான சூழலை கடைபிடிக்க வேண்டும். ஏகாதசி திதி அன்று அதிகாலையில் எழுந்த நீராடி சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். பூஜை அறையில் மஞ்சள் ஆசனம் விரித்து அதில் விஷ்ணுவின் படம் அல்லது சிலையை வைக்க வேண்டும். நாள் முழுவதும் முழு உபவாசம் (உண்ணாவிரதம்) இருக்க வேண்டும். உடல்நிலை காரணமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள், பால், தண்ணீர் போன்றவற்றை அருந்தலாம்.
பெருமாளுக்கு உகந்த துளசி இலைகளால் அர்ச்சிக்க வேண்டும். துளசியை பார்ப்பதால் பாவம் நீங்கும், தொடுவதால் உடல் தூய்மையாகும், பிரார்த்திப்பதால் நோய்கள் குணமாகும் என இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது. துளசி செடி நடுவோர் கிருஷ்ணரோடு வசிக்கும் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள் என்றும், துளசி செடிக்கு விளக்கேற்றி வழிபடுபவர்களின் புண்ணிய கணக்கை சித்திரகுப்தனாலும் கணக்கிட முடியாது என பிரம்மதேவர் கூறுவதாகவும் இந்து மதம் கூறுகிறது. துளசி இலைகளால் விஷ்ணுவின் புகைப்படத்தை அர்ச்சித்துக் கொண்டு, திருமாலின் திருநாமங்களை ஜெபிக்க வேண்டும். பகலில் தூங்குதல், தீய சொற்களை பேசுதல், பிறர் மனம் நோகம்படியான செயல்களை செய்தல் ஆகியவற்றை செய்தல் கூடாது. இந்த நாளில் வஸ்திர தானம், அன்னதானம் ஆகியவற்றை செய்யலாம்.
ஏகாதசி முடிந்த அடுத்த நாளான துவாதசியன்று விரதத்தை நிறைவு செய்யலாம். ஜூலை 22 ஆம் தேதி காலை 6:06 மணி முதல் 7:05 மணி வரை பாரணை செய்ய உகந்த நேரம் ஆகும். துளசி இலை, அகத்திக்கீரை, நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பாரணையில் நெய் பயன்படுத்தி சமைத்த சாத்வீக உணவை உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். விரதம் முடிந்ததும் அருகில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வரலாம். இயன்றவர்கள் ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் ஆகியவற்றை செய்யலாம். ஏகாதசி திதியானது ஜூலை 20 அன்று மதியம் 12:12 மணிக்கு தொடங்கி ஜூலை 21 காலை 9:30 மணிக்கு நிறைவடைகிறது. காமிகா ஏகாதசி விரதம் இருக்க வேண்டிய நாள் ஜூலை 21 திங்கட்கிழமை. விரதம் முடிக்கும் நேரம் ஜூலை 22 காலை 6:06 மணி முதல் 7:05 மணி வரை.
காமிகா ஏகாதசி விரதத்தை பக்தியுடன் கடைபிடிப்பவர்களுக்கு பெருமாளின் பரிபூரண ஆசி கிட்டும். இவர்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறலாம் என்பது நம்பிக்கை.