Published : Jul 23, 2025, 03:23 PM ISTUpdated : Jul 23, 2025, 03:32 PM IST
2025 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை ஜூலை 24 ஆம் தேதி வருகிறது. இந்த தினத்தில் எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
உத்தராயண காலம் முடிந்து தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசையான ஆடி அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு. இந்த தினத்தில் தெய்வங்களின் அருளோடு, முன்னோர்களின் ஆசியையும் நம்மால் பெற முடியும். பித்ருலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் அமாவாசை தினத்தில் நேரடியாக பூமிக்கு வருவதாகவும், அவர்களுக்காக நாம் செய்யும் தர்ப்பணம், திதி ஆகியவற்றை முன்னோர்கள் நேரடியாக பெற்றுக் கொண்டு அவர்கள் நம்மை மனதார வாழ்த்துவதாகவும் ஐதீகம். அவர்களுடைய ஆசியானது பல தலைமுறைக்கும் வளங்களை கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.
25
ஆடி அமாவாசை: தர்ப்பணம், படையலிட நல்ல நேரம்
இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஜூலை 24 ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அமாவாசை திதியானது 24-07-2025 அன்று அதிகாலை 3:06 மணிக்குத் தொடங்கி, 25-07-2025 அதிகாலை 1:48 மணி வரை நீடிக்கிறது. ஜூலை 24 வியாழக்கிழமை சூரிய உதயத்திற்கு பிறகு காலை 7:30 மணி முதல் 12:00 வரை தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த நேரம் ஆகும். ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் தர்ப்பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். படையல் போடுவதற்கு உகந்த நேரம் என தனியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் தர்ப்பணம் கொடுத்த பிறகு வீட்டின் பெரியவர்கள் உணவு உட்கொள்வதற்கு முன்பு படையலிடலாம். அதன்படி 12 மணிக்கு தொடங்கி 1:20 மணிக்குள் படையலிட வேண்டும்.
35
சூரிய உதயத்திற்கு பின்பு தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
பலருக்கும் ஆறு மணிக்கு முன்பாக சூரிய உதயம் ஆவதற்கு முன்பே தர்ப்பணம் கொடுக்கலாமா என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் சூரியன் உதயமானதற்கு பின்பு தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்கிற நியதி உள்ளது. ஏனென்றால் சூரியனை சாட்சியாக வைத்து தான் நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறோம். இந்த ஆண்டு வியாழக்கிழமை வரும் அமாவாசையில் காலை சூரிய உதயத்திற்கு பின்பான 6:00 முதல் 7:30 வரை நேரம் நன்றாக இல்லை என்பதால் 7:30 மணிக்கு மேல் தர்ப்பணம் கொடுக்கலாம். நீர் நிலைகளுக்குச் சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்கலாம்.
வீட்டிலேயே தர்ப்பணம் கொடுக்க விரும்புவர்கள் ஒரு தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் கருப்பு எள், தர்ப்பை புல், சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்கள் முன்னோர்களையும் காசி, கயா போன்ற புனிதமான இடங்களையும் நினைத்து எள்ளையும் தண்ணீரையும் இறைக்க வேண்டும். பிறகு அந்த தண்ணீரை கால் படாத இடத்தில் சென்று கொட்டி விட வேண்டும். இயன்றவர்கள் நீர் நிலைகளுக்குச் சென்று தர்ப்பணம் கொடுக்க வேண்டும். குறிப்பாக கடலோரங்களில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று அங்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. திருச்செந்தூர், ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பது மேலும் சிறப்பை தரும்.
55
மறக்காமல் அன்னதானம் செய்யுங்கள்
நாம் எத்தகைய வழிபாடு செய்தாலும் அத்தகைய வழிபாடு பூர்த்தி அடைவது என்பது பிறருடைய பசிப்பிணியை போக்கினால் மட்டுமே நடக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அமாவாசை தினத்தில் உங்கள் விரதத்தை நிறைவு செய்து மாலையில் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு பின்னர் இயலாதவர்களுக்கு அன்னதானம் கொடுங்கள். பெற்றோர்களுக்கு ஆண் பிள்ளைகள் இல்லாமல் பெண் பிள்ளைகள் மட்டும் இருந்தாலோ அல்லது மருமகள்கள் தங்கள் மாமனார் மாமியாருக்கு செய்ய விரும்பினாலோ எள் மற்றும் தண்ணீர் இறைப்பதை தவிர்த்து விட்டு படையல் மட்டும் போட்டு வழிபடலாம். நாம் இந்த நிலையில் இருப்பதற்கு காரணமான முன்னோர்களை அமாவாசை தினத்தில் வழிபட்டு அவர்களின் ஆசியை பரிபூரணமாக பெறுங்கள்.