Sandakari Review : 7 வருட காத்திருப்புக்கு ஒர்த்தா? ஒர்த் இல்லையா? சண்டக்காரி விமர்சனம்

Published : Sep 18, 2026, 12:20 PM IST

Sandakari Movie Review : மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா, பிரபு நடிப்பில் சுமார் 7 வருட காத்திருப்புக்கு பின் ரிலீஸ் ஆகி உள்ள சண்டக்காரி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

PREV
15
Sandakari Movie Review

இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில் விமல் - ஸ்ரேயா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த படம் சண்டக்காரி. இப்படத்தில் பிரபு, கே.ஆர். விஜயா, சத்யன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட இப்படம் பல்வேறு காரணங்களால் வெளியீடு தாமதமான நிலையில், தற்போது ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விமல் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்த காலகட்டத்தில் உருவான இப்படம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.

The Dark Heaven Movie Review : மரணத்தை முன்கூட்டியே சொல்லும் மர்ம புத்தகம் - தி டார்க் ஹெவன் விமர்சனம்

25
சண்டக்காரி படத்தின் கதை என்ன?

லண்டனில் பிரபல நிறுவனத்தில் உயர் பதவியில் பணிபுரியும் மாயா கதாபாத்திரத்தில் ஸ்ரேயா. கண்டிப்பான அணுகுமுறையுடன் இருக்கும் அவரிடம் உதவியாளராக வேலைக்குச் சேருகிறார் விமல். மாயாவின் கீழ் பணியாற்றிய பலரும் அவரது கடுமையான குணத்தை சமாளிக்க முடியாமல் வேலையை விட்டு வெளியேறிய நிலையில், விமல் மட்டும் தொடர்ந்து அங்கே பணியாற்றுகிறார். இந்த இருவருக்கும் இடையே உருவாகும் உறவு, பின்னர் காதலாக மாறுகிறதா? அவரை சொந்த ஊருக்கு அழைத்து வரும் விமலின் திட்டம் என்ன ஆனது? ஆரம்பத்தில் அப்பாவியாகத் தெரியும் விமல், பின்னர் வேறு கோணத்தில் செயல்படத் தொடங்குவது ஏன்? என்பதே படத்தின் மீதிக்கதை.

35
விமல் – ஸ்ரேயா நடிப்பு எப்படி?

‘களவாணி’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ போன்ற படங்களில் ரசித்த விமலின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பை மீண்டும் பார்க்க முடிவது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. ஸ்ரேயா தனது மாயா கதாபாத்திரத்தை ஸ்டைலான தோற்றத்துடனும், தனக்கே உரிய நடிப்பு பாணியுடனும் கையாண்டிருக்கிறார். குறிப்பாக படத்தின் பல இடங்களில் ஸ்ரேயாவின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. விமலின் தந்தையாக பிரபு, பாட்டியாக கே.ஆர். விஜயா, தாயாக உமா பத்மநாபன் உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். வில்லன் கதாபாத்திரத்தில் தேவ் கில் நடித்துள்ளார்.

45
எங்கு தடுமாறுகிறது?

படத்தின் முதல் பாதியில் அப்பாவியான உதவியாளராக வரும் விமலும், கடுமையான குணம் கொண்ட மாயாவாக வரும் ஸ்ரேயாவும் இடைவேளைக்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையில் காட்டப்படுகிறார்கள். இந்த மாற்றம் திரைக்கதையில் இயல்பாகப் பொருந்தவில்லை. மேலும், கதாபாத்திரங்களுக்கான ஆழமான பின்னணி உருவாக்கப்படாததால், சில முக்கியமான காட்சிகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வில்லன் கதாபாத்திரமும் வலுவாக வடிவமைக்கப்படாதது படத்தின் மற்றொரு குறையாகத் தெரிகிறது.

அம்ரிஷ் இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பழைய கால கமர்ஷியல் படங்களின் இசை பாணியை நினைவூட்டுகின்றன. குறிப்பாக லண்டன் பப் காட்சியில் வரும் பாடலும், கிராமத்து பின்னணியில் விமலுடன் ஸ்ரேயா இடம்பெறும் பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அதே நேரத்தில், சில பாடல் வரிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன. பழைய பாணியிலான நகைச்சுவைக் காட்சிகளும் எல்லா இடங்களிலும் கைகொடுக்கவில்லை.

55
பிளஸ் - மைனஸ் என்ன?

விமலின் இயல்பான, ஜாலியான நடிப்பு. ஸ்ரேயாவின் ஸ்கிரீன் பிரசன்ஸ், பிரபு, கே.ஆர். விஜயா உள்ளிட்ட மூத்த நடிகர்களின் பங்களிப்பு, அம்ரிஷ் இசையில் சில ரசிக்க வைக்கும் பாடல்கள், லண்டன் மற்றும் கிராமப்புற பின்னணியில் அமைந்த காட்சிகள் ஆகியவை படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளன.

பலவீனமான திரைக்கதை, கதாபாத்திரங்களுக்கு போதிய அழுத்தம் கொடுக்கப்படாதது, இடைவேளைக்குப் பிறகு வரும் கேரக்டர் மாற்றங்கள் இயல்பாக அமையாதது, வலுவில்லாத வில்லன் கதாபாத்திரம், பழைய பாணி காமெடி மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள், சில பாடல் வரிகள் மற்றும் காட்சிகளின் தரம் ஆகியவை மைனஸ் ஆக உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட படம் என்பதால், ‘சண்டக்காரி’யில் அந்தக் காலகட்டத்தின் கமர்ஷியல் சினிமா பாணி அதிகமாகத் தெரிகிறது. விமலின் இயல்பான நடிப்பும் ஸ்ரேயாவின் கதாபாத்திரமும் படத்திற்கு சில சுவாரஸ்யமான தருணங்களை வழங்கினாலும், திரைக்கதையின் பலவீனம் ஒட்டுமொத்த அனுபவத்தை பாதிக்கிறது. விமல் மற்றும் ஸ்ரேயாவின் ரசிகர்களுக்கு ஒரு முறை பார்க்கக்கூடிய படமாக ‘சண்டக்காரி’ அமைந்துள்ளது.

Enna Vilai Review : கருணாஸின் என்ன விலை படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? விமர்சனம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories