கரூருக்கு செல்ல காவல்துறை தடை விதிக்காத சூழலில் இன்னும் என்ன காரணம் விஜய் வீட்டுக்குள்ளேயே முடக்கி போட்டு இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தருக்கிறது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விட்ட நிலையில், தன்னை சந்திக்க வந்தவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள் என தார்மீக பொறுப்பேற்று முன்னாள் வந்து நின்று இருக்க வேண்டிய விஜய், வீட்டை விட்டு இன்னும் வெளியிலே வராமல் இருப்பதன் மூலம் என்ன செய்தியை சொல்ல நினைக்கிறார் என்பதும் புரியாத புதிராக உள்ளது. கரூர் சம்பவத்தில் சதி இருப்பதாகவோ அல்லது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாகவோ நிச்சயமாக நம்புகிறார். விஜய் மௌனமாக இருப்பது அவர் மீது வரும் விமர்சனத்திற்கு அவரே பழி போட்டுக் கொள்வதைப் போலத்தான் இருக்கிறது.
கட்சி தொடங்கியதில் இருந்தே எந்த தவெக மீதும் விஜய் மீதும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வந்தன. அதையெல்லாம் விஜய் கண்டுகொண்டாரா என்பது தெரியவில்லை. கரூர் விவகாரத்தில் தாமதமாக 3 நாட்கள் கழித்து வீட்டில் உட்கார்ந்து கொண்டு வீடியோவில் பேசியிருக்கிறார். கரூர் விவகாரத்தில் யார் மீது தவறு? யாருக்கு பொறுப்பு? என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்காமல் இருப்பது அவருக்கு இருக்கும் ஆதரவை குறைத்துக் கொள்ளும் வகையில் தான் இருக்கிறது. விரைவிலேயே கரூர் மக்களை சந்திப்பேன் என மூன்றாவது நாள் பேசிய வீடியோவிலேயே விஜய் கூறிவிட்டார். ஆனாலும், இத்தனை நாள் தாமதத்திற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.